திருப்பரங்குன்றம், ஜன. 4: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் திருப்பணிகளின் ஒரு பகுதியாக. அடுத்த மாதம் உப கோயில்களில் பாலாலயம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்துவது மரபு. அந்த வகையில் கடந்த 2000வது ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கடந்த 2012க்கு பதிலாக 2011ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி திருப்பணிகள் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது திட்டமிட்டப்படி கோயிலின் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரத்தில், தங்க கலசம் பொருத்துவது உள்பட சில திருப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்த நாள், நட்சத்திரத்தை குறிக்கும் வகையில், கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து பூசம் நட்சத்திரத்தன்று வருடாபிஷேகம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஆகம விதிப்படி ஏற்கனவே மகா கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கோயிலின் துணை ஆணையர் நியமனம் செய்யப்படாமல் இருந்ததால் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இதற்கிடையே மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் குறித்த எதிர்பார்ப்பு பக்தர்களிடையே அதிகரித்தது.
இதற்கிடையே கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்குவதற்கு முன்பாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்கான சொக்கநாதர் கோயில், பழநியாண்டவர் கோயில், காசி விசுவநாதர் கோயில் உள்ளிட்டவற்றில் முதல்கட்டமாக மராமத்து வேலைகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக இக்கோயில்களில் உள்ள பிரகாரங்கள், தூண்கள் ஆகியவற்றை அளவீடு செய்யும் பணிகள் கடந்த டிசம்பர் மாத இறுதியில் துவங்கியது.
இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் உப கோயில்களில் பாலாலயம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதற்காக பிப்.10 உள்ளிட்ட முன்று நாட்கள் முடிவு செய்யப்பட்டு, இந்து அறநிலையதுறையின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பும் பணிகளை திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக, கோயில் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறநிலையத்துறை ஒப்புதலுக்கு பின்னர் பாலாலயம் நடைபெறும் என தெரிகிறது.
The post திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களில் பாலாலயம்: அடுத்த மாதம் நடக்கிறது appeared first on Dinakaran.