சத்தியமங்கலம், ஜன.4: பவானிசாகர் அருகே விவசாயிகளுக்கு பயன்படாத இடத்தில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் கட்டியது முதல் இன்று வரை 5 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தை சத்தியமங்கலம் பகுதியில் கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து செயல்படுத்தப்படும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தின் மூலம் ஆண்டுதோறும் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில், பவானிசாகர் சுற்று வட்டார மற்றும் சத்தியமங்கலம் வட்டாரங்களில் உள்ள தொட்டம்பாளையம், எரங்காட்டூர், அக்கரை, தத்தப்பள்ளி, உத்தண்டியூர், அய்யன் சாலை, மாரனூர், நஞ்சப்பகவுடன்புதூர், சத்தியமங்கலம், செண்பகப்புதூர், மேட்டூர், தங்க நகரம், வேடசின்னானூர், குந்திபொம்மனூர், ஜல்லியூர், அரியப்பம்பாளையம் பெரியூர், மில்மேடு, உக்கரம், சாணார்பாளையம், மூலக்கிணறு, புதுக்கொத்துக்காடு, இண்டியம்பாளையம், அரசூர், மாக்கினாங்கோம்பை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள 2500 ஏக்கர் நிலங்களில் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர்.
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இரண்டு வட்டாரங்களுக்கும் சேர்த்து ஆண்டுதோறும் நெல் அறுவடை செய்யப்படும் ஜனவரி சீசனில் மட்டும் செண்பகப்புதூரில் உள்ள தனியார் மில்லில் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த, பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்கும் வகையில் சேமிப்பு கிடங்கு வசதியுடன் கூடிய நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஈரோடு மண்டலம் சார்பில் நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் கீழ் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நால்ரோடு அண்ணாநகர் பகுதியில் ரூ.40 லட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது.
இதில், சேமிப்பு கிடங்கு, நெல் மூட்டைகளை எடை போட ஏதுவாக கான்கிரீட் தளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்கு காரணம் நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்ட இடத்திற்கும் நெல் விளைவிக்கும் கிராமங்கள் உள்ள பகுதிக்கும் சம்பந்தமில்லாத இடமாகவும், நெல் விளையும் பகுதிகளில் இருந்து சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் மட்டுமே இந்த நெல் கொள்முதல் நிலையத்தை சென்றடைய முடியும் என்பதால் இங்கு விவசாயிகள் நெல்லை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த நெல் கொள்முதல் நிலையம் நெல் விளையும் பகுதிக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டிடம் கட்டியது முதல் இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால், இந்த நெல் கொள்முதல் நிலையம் கட்ட பயன்படுத்தப்பட்ட ரூ.40 லட்சம் நிதி வீணாகியுள்ளது.
நெல் கொள்முதல் நிலையத்தை சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் செல்லும் சாலையில் உள்ள அய்யன்சாலை, மாரனூர், செண்பக புதூர், உக்கரம் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை கட்டி இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழக அதிகாரிகளின் அலட்சியத்தால் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு பயன்படாத நிலையில் உள்ளது.
புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகள் கவனமாக செயல்பட்டிருந்தால் அரசு நிதி வீணாகாமல் தடுத்திருக்கலாம். நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் செயல்பாட்டில் இல்லாததால் புதர் மண்டி கிடப்பதோடு சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, பவானிசாகர் வட்டாரம் மற்றும் சத்தியமங்கலம் வட்டாரம் இரண்டுக்கும் சேர்த்து சத்தியமங்கலம் அல்லது செண்பகபுதூர் பகுதியில் விவசாயிகள் நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் சேமிப்புக் கிடங்கு உடன் கூடிய நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post காலாவதியான அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிமுக ஆட்சியில் கட்டிய கட்டிடம் வீணானது சத்தியில் நெல் கொள்முதல் நிலையம் கட்டப்படுமா? appeared first on Dinakaran.