ஒட்டன்சத்திரம், ஜன. 4: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்து தொகுதியில் பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகள் குறித்தும், நடந்து வரும் திட்ட பணிகள் மற்றும் அதன் நிலை குறித்தும், நிறைவேற்றப்படவுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அதை துவங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அத்திட்டங்களின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்தாலும் அவற்றை செயல்படுத்தும் இடத்திலும், மக்களை சென்று சேருவதிலும் அரசு அலுவலர்களின் பணி மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் 44 மாதங்களில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்களின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான மின் இணைப்புகள், மின் மோட்டார்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தை வரும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தில் கீரனூர் பேரூராட்சியில் 432 வீடுகளுடனும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 480 வீடுகளுடனும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன.
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சாலை வசதி மற்றும் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதியில் 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் தேவைப்படும் இடங்களில் கூட்டுறவு வங்கிகள் துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கீரனூரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், கள்ளிமந்தையத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், பெண்கள் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.22 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. பரப்பலாறு, நங்காஞ்சியாறு, தலைக்குத்து ஆகிய இடங்களில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நரிக்கல்பட்டியில் கைத்தறி பூங்கா அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். தொடர்ந்து அமைச்சர், கப்பிளியப்பட்டி- கிருஷ்ணகவுண்டன் புதுாரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பால கட்டுமான பணிக்கு ஆணையை வழங்கினார்.
The post ஒட்டன்சத்திரம் தொகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மார்ச்சில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.