விக்கிரவாண்டியில் எல்கேஜி மாணவி உயிரிழப்பு விவகாரம் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

விழுப்புரம், ஜன. 9: விக்கிரவாண்டி செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி மாணவி உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர் ஆகியோரின் ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3ம் தேதி எல்கேஜி மாணவி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமினிக்மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய 3பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தொடர்ந்து மூன்று பேரையும் வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே தாளாளர் எமில்டா, முதல்வர் டொமினிக்மேரி இருவரும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கூறி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் மட்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமினிக்மேரி, வகுப்பாசிரியர் ஏஞ்சல் ஆகிய மூன்று பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி மணிமொழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் நடைபெற்றன.

அப்போது வகுப்பாசிரியர் ஏஞ்சல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவத்தின் போது ஆசிரியர் வகுப்பறையில் இருந்தார் என்றும், அவருக்கும் நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், ஆசிரியருக்கு இரு குழந்தைகள் இருப்பதால், அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார். இதேபோல் பள்ளி தாளாளர், முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருவதாகவும், பள்ளியை நிர்வாகிக்கும் பொறுப்பு இருப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கருத்தில் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை ஆரம்ப கட்டங்களில் உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி மணிமொழி, இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி, பள்ளி தாளாளர் உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து 3பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post விக்கிரவாண்டியில் எல்கேஜி மாணவி உயிரிழப்பு விவகாரம் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: