சென்னை: அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்ததை அரசியலாக்கி கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த தனியார் பள்ளிகள் தொடக்கவிழாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அரசுப் பள்ளிகளுக்கு சிஎஸ்ஆர் நிதி மூலம் உதவ இருக்கிறோம் என்று தெரிவித்ததை சிலர் தவறாக புரிந்து கொண்டு அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கப் போகிறது என்றும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் அறிக்கைவிட்டனர்.
அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப் பள்ளிகளில் நூலகங்கள், வர்ணம் பூசுதல், பள்ளி மைதானங்களை சுத்தப்படுத்துதல், தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தல், மாணவர்களுக்கான இதர பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தல், கணினி, உள்ளிட்ட தொழில் நுட்ப பொருங்களை வாங்கிக் கொடுத்தல் என்று பல்வேறு வகையில் உதவ வேண்டும் என்ற நோக்கில் சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும் அரசுப் பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை, அமைச்சரும், அதிகாரிகளும் சொல்லவில்லை.
அப்படி சொல்லப்படாத ஒரு சொல்லை அரசியலாக்கி, தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கிறதா என்று கேட்பது தனியார் பள்ளிகளின் தாளாளர்களின் பெருந்தன்மையை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. ஆகவே தனியார் பள்ளிகள் சங்கம் சொன்னதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தனியார் பள்ளிகள் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
The post அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்வதை கொச்சைப்படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் appeared first on Dinakaran.