சேலம், ஜன.3: சேலம் மாவட்ட வனப்பகுதியில் புத்தாண்டையொட்டி வன விலங்குகள் வேட்டையை தடுக்க தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏற்காடு வனத்தில் பன்னிக்கரடு காப்புக்காடு பகுதியில் புத்தாண்டு தினத்தில் வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனவர்கள் பழனிவேல், மணிவண்ணன் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது, காட்டிற்குள் ஆயுதங்களுடன் 3 பேர் சுற்றித்திரிந்தனர். அவர்களை வனத்துறையினர், சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில், காட்டிற்குள் மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட வந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள், சேலம் கொல்லப்பட்டி தட்டாஞ்சாவடியை சேர்ந்த பழனிவேல் (50), தேக்கம்பட்டி வட்டக்காட்டை சேர்ந்த தமிழ்மணி (37), குப்புசாமி (62) எனத்தெரியவந்தது. சிக்கிய 3 பேர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி முன் ஆஜர்படுத்தினர். அவர் விசாரணை நடத்தி, வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட வந்த குற்றத்திற்காக ₹2.75 லட்சம் அபராதம் விதித்தார். அந்த அபராததொகையை வனத்துறையினர் வசூலித்தனர்.
The post மான் வேட்டைக்கு வந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.