- திருப்பூருர்
- தையூர்
- கேளம்பாக்கத்தில்
- OMR
- Navalur
- படூர்
- முட்டுக்காடு
- ஏகாட்டூர்
- புதுப்பாக்கம்
- சிறுசேரி
- தாழம்பூர்
- தின மலர்
திருப்போரூர்: தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியில் விடுவதாக புகார் எழுந்துள்ளது. ஓ.எம்.ஆர் சாலையில் நாவலூர், படூர், முட்டுக்காடு, ஏகாட்டூர், கேளம்பாக்கம், தையூர், புதுப்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர் ஆகிய ஊராட்சிகளில் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இங்கு, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மென்பொருள் பொறியாளர்கள் பலரும் குடும்பத்துடன் குடியேறி வருகின்றனர். இவ்வாறு, கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பல்வேறு வசதிகள் வழங்கபப்படும் என ஆசை வார்த்தை கூறி பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளம்பரங்களை செய்கின்றன.
இதன் காரணமாக உந்தப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் பொதுமக்கள் விளம்பரத்தில் கூறப்பட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படாததால், மாதாந்திர வங்கிக் கடனை அடைக்க வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக வாடகை வீட்டில் வசிக்காமல் இருக்கிற வசதிகளுடன் சொந்த வீட்டிற்கு குடியேறுகின்றனர். உடற்பயிற்சி கூடம், பூங்கா, இறகுப்பந்து மைதானம், மினி தியேட்டர் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட உள்ளதாக தனியார் வீடு கட்டும் நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும் கழிவுநீரை அகற்றுதல், தடையற்ற குடிநீர் ஆகிய இரண்டு வசதிகள் இருந்தால் போதும் என்று நினைத்து மக்கள் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கத் தொடங்குகின்றனர்.
இவ்வாறு, வசிப்பவர்களிடம் அந்தந்த குடியிருப்புகளின் தரத்திற்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பராமரிப்புத் தொகையாக வசூலிக்கப்படுகிறது. 20 குடியிருப்புகளுக்கு மேல் இருந்தால் அந்த குடியிருப்பு வளாகத்திலேயே கழிவுநீரை சுத்திகரிக்கும் மையம் அமைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதேபோல் குடிநீர் வசதி, துப்புரவு வசதி போன்றவற்றையும் அந்தந்த குடியிருப்பு நிர்வாகங்களே செய்துக்கொள்ள வேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆனால், குடியிருப்பாளர் நல சங்கங்களோ அவற்றை பராமரிப்பவர்களோ இந்த குடியிருப்புகளின் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்வதில்லை. அதற்கு, பதிலாக இரவு நேரங்களில் இவற்றை அருகில் உள்ள கால்வாய் பகுதிகளில் சட்ட விரோதமாக விடுகின்றனர்.
இதன் காரணமாக குடியிருப்புகளைச் சுற்றிலும் கழிவுநீர் தேங்குவதோடு அவற்றில் கொசு உற்பத்தியாகி நோயை பரப்புகின்றன. இதுமட்டுமின்றி சில குடியிருப்புகளில் இந்த கழிவுநீரை அதே வளாகத்தில் உள்ள பூங்காவில் உள்ள புல் தரை, செடி, கொடிகளுக்கு ஊற்றுகின்றனர். இதனால் குடியிருப்புவாசிகளுக்கே காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக படூர், கேளம்பாக்கம், தையூர் ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுபோன்று சட்ட விரோதமாக கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் விடப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களும் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீரை வெளியேற்றும் முறை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியில் விடுவதாக புகார் appeared first on Dinakaran.