செய்யூர்: பெருக்கரணை கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கிணறு திறந்தநிலையில் உள்ளதால் குடிநீர் மாசடைந்து வருவதாக அப்பகுதி மக்களிடையே புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவ்வூராட்சியை ஓட்டியுள்ள வனப்பகுதியில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கிணறு உள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் கிணறு தற்போது சிதிலமடைந்து சுற்றிலும் செடி, கொடிகள் மண்டி கிணறு பாழடைந்து உள்ளது.
கிணற்றின் மேல் இரும்பு வெளியோ சிமென்ட் சிலாப்போ அமைக்கப்படாமலும் உள்ளது. மேலும், அப்பகுதியில் உலாவும் குரங்குகள் உணவு கழிவுகளை கிணற்றினுள் போட்டு செல்வதால் கிணற்று நீர் மாசடைந்துள்ளதாகவும் மாசடைந்த இந்த நீரை தான் பருகி வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஊராட்சி நிர்வாகமும் ஒன்றிய நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. தொடர்ந்து இந்த குடிநீரை பருகி வருவதால் கிராம மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் இக்குடிநீர் கிணற்றை முறையாக பராமரிப்பது அல்லது புதிய குடிநீர் கிணற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பெருக்கரணை கிராமத்தில் திறந்தநிலையில் காணப்படும் குடிநீர் கிணறு: பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.