திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்கு உட்பட்ட பாலகிருஷ்ணா நகரில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஓவர்ரேட் முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்கு காரில் வரும்போது, எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி அங்கிருந்த மின்சார கம்பத்தின் மீது மோதியது.
இதில் கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து காரின் மீது சாய்ந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் சிக்கி இருந்தவரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர். மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட மின் வயரில் இருந்து மின் கசிவு ஏற்படாததால் காரை ஓட்டி வந்த சிவில் இன்ஜினியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் கம்பம் சாயும் போது அந்த வழியாக யாரும் நடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ஜோதி நகர் மின்வாரிய பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் உடனடியாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் சாத்தாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்கம்பத்தின் மீது மோதி நின்ற காரை வெளியே எடுத்து மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் காரணமாக சுமார் 4 மணி நேரம் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
The post அதிவேக கார் மோதி மின் கம்பம் சாய்ந்தது appeared first on Dinakaran.