திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் தினத்தன்று புதுப்பானையில் பொங்கலிட்டு படையல் இடுவது வழக்கம். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மண் பானை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மடவாளம், கந்திலி, பாரண்டபள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர்.
இவர்கள் பொங்கல், தீபாவளி, கார்த்திகை தீபம் மற்றும் நவராத்திரி விழாவுக்கு தேவையான மண்பாண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.தற்போது, இத்தொழிலில் போதிய வருவாய் இல்லாததால், சிலர் மாற்றுத்தொழிலுக்கு மாறிவிட்டனர். இருப்பினும் சிலர் தொழிலை கைவிட மனமின்றி பல்வேறு இடர்பாடுகளுக்கும் இடையில் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் கூறியதாவது:
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு 2 மாதங்களுக்கு முன்னரே பானைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம். இந்த ஆண்டு பரவலாக பெய்த மழை மற்றும் வெயிலின் தாக்கம் குறைந்ததால் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக ஓரளவுக்கு வெயில் காணப்பட்டதால் பானைகளை தயாரித்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். களிமண், விறகு, ஆட்கள் கூலி உயர்ந்துள்ளதால், பானைகளின் விலை கடந்தாண்டை விட ₹100 அதிகரிக்கும். தமிழக அரசு மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மண்வெட்டி, கடப்பாரை, சல்லடை உள்ளிட்ட உபகரணங்களை இலவசமாக வழங்கி இத்தொழிலை நலிவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கி வருகிறது. இதில், பொங்கல் பானை மற்றும் அடுப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் தமிழர்களின் பாரம்பரிய முறையிலான மண் பானையில் மக்கள் பொங்கல் வைக்கும் பழக்கம் ஏற்படும். மேலும், மண்பாண்ட தொழில் அழிவிலிருந்து மீட்கப்படும். இதை நம்பியுள்ள தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பொங்கல் பானை தயாரிப்பு பணி தீவிரம்: ரேஷன் கடையில் பானை இலவசமாக வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.