கே.வி.குப்பம், டிச.30: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் மணிமேகலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஓட்டிச்சென்றார். பின்னர், மாலையில் வீட்டுக்கு ஓட்டிச்செல்ல முயன்றார்.
அப்போது, ஒரு புதரையொட்டி ஆடுகள் பதறியபடி ஓடியது. அச்சத்துடன் அங்கு சென்று பார்த்தபோது ஒரு ஆடு கால்கள், கழுத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது. மற்றொரு ஆடு காயத்துடன் விழுந்து கிடந்தது. மேலும், 3 ஆடுகளை காணவில்லை. இதனால் அச்சம் அடைந்த மணிமேகலை படுகாயம் அடைந்த ஆட்டை வீட்டிற்கு ஓட்டி வந்துவிட்டார். பின்னர், நேற்று அந்த ஆட்டை கீழ்ஆலத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த ஆட்டை மர்ம விலங்கு கடித்திருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் கூறும் நிலையில், சிறுத்தை தான் தாக்கியுள்ளது என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் அடுத்த துருவம் பகுதியில் கடந்த வாரம் சிறுத்தை தாக்கி இளம்பெண் இறந்தார். தொடர்ந்து பனமடங்கி பகுதியில் 9 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேய்ச்சலுக்கு சென்றதில் 3 ஆடுகளை காணவில்லை. ஒரு ஆடு இறந்த நிலையில் மற்றொரு ஆடு படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. எனவே, காணாமல்போன 3 ஆடுகளை சிறுத்தை கவ்விச்சென்றிருக்கலாம் எனவும், சிறுத்தை தாக்கியதில் ஆடு பலியாகி இருக்கலாம் எனவும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 4 ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை; கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.