வீட்டுமனை பட்டா கேட்டு பெண் தீக்குளிக்க முயற்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பொய்கை சமத்துவபுரம் பகுதியில்

வேலூர், டிச.24: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ மாலதி உள்பட அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். அப்போது வேலூர் அடுத்த பொய்கை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஜீவா. கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி யசோதா(44). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். கூட்ட அரங்கம் எதிரே தனது பையில் மறைத்து எடுத்து வந்த கேனை எடுத்து மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளித்த முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். தகவல் அறிந்த டிஆர்ஓ மாலதி, யசோதாவிடம் விசாரணை நடத்தினார்.

அவரிடம் யசோதா கூறியதாவது: நான் எனது கணவர் மற்றும் 2 மகள்களுடன் பொய்கை சமத்துவபுரத்தில் வசிக்கிறேன். சமத்துவபுரத்தில் எங்களுக்கு 5 சென்ட் நிலத்துடன் அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் எங்களின் பின்புற வீட்டுக்காரர், எங்களுக்கான பட்டா ஆதாரத்தை காட்டுங்கள். இல்லை என்றால் காலி செய்யுங்கள் என மிரட்டல் விடுக்கிறார். எங்களின் இடத்தை அபகரிக்க பார்க்கிறார். நான் கடந்த 21 ஆண்டுகளாக பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். எனவே வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து டிஆர்ஓ மாலதி கூறுகையில், நாளை(இன்று) உங்கள் வீட்டிற்கு தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்துவார்கள். அதற்குபிறகு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விபரீதமான செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டுமனை பட்டா கேட்டு பெண் தீக்குளிக்க முயற்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பொய்கை சமத்துவபுரம் பகுதியில் appeared first on Dinakaran.

Related Stories: