×

வாலாஜாபாத் ஒன்றியத்தில் அய்யம்பேட்டை ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?: எதிர்பார்ப்பில் கிராம மக்கள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை ஊராட்சியில் பழைய ஊராட்சி அலுவலக கட்டிடதத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை ஊராட்சியில் தர்மராஜா பேட்டை, ராஜிவ்காந்தி நகர், அம்பேத்கர் நகர், பரமேஸ்வரன் காலனி உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகள் உள்ளன. மேலும் ஊராட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக கால்நடை வளர்த்தல், நெசவு தொழில் செய்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், மேல்நிலைப்பள்ளி, வங்கிகள், ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் அய்யம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் காஞ்சிபுரம் சாலையையொட்டி அமைந்துள்ளது.

1963ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த கட்டிடத்தில் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒரு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாதந்தோறும் நடைபெறும் ஊராட்சிமன்ற கூட்டத்தில் 12 கவுன்சிலர்களும், கூட்டரங்கு இன்றி சிறிய அறையில் இட நெருக்கடியில் உட்கார்ந்து மக்களின் பிரச்னையை விவாதித்து வருகின்றனர். வாலாஜாபாத் – காஞ்சிபுரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஊராட்சிமன்ற கட்டிடம் சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக அமைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் சிறுதுளி மழை பெய்தாலே அலுவலகத்தின் முன்பு குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கும்.

ஒரு சில நேரங்களில் தொடர்மழை பெய்தால் மழைநீர் அலுவலகத்திற்குள் சென்று விடுகிறது. இதனால் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பாதுகாப்பாக வைப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி கட்டுவதற்காக அலுவலகத்திற்கு வரும் கிராம மக்கள் அலுவலகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலையில் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சி மன்ற புதிய அலுவலகங்கள் கட்டிவரும் நிலையில், அதிக மக்கள் பயன்பாடு கொண்ட அய்யம்பேட்டை ஊராட்சிமன்ற அலுவலகத்தையும் அனைத்து வசதிகளும் கூடிய புதிய அலுவலகமாக கட்டித் தர வேண்டும் என கலெக்டரிடமும், மாவட்ட திட்ட இயக்குனரிடமும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மனு அளித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post வாலாஜாபாத் ஒன்றியத்தில் அய்யம்பேட்டை ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?: எதிர்பார்ப்பில் கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Ayyampet Orratchi ,Valajabad Union ,Valajabad ,Walajabad Union ,Ayyampet ,Valajabad Union Ayyampet Uradchi ,Dharmaraja Patti ,Rajivkanti Nagar ,Ambedkar Nagar ,Parameswaran Colony ,Orratchi ,Union ,
× RELATED காஞ்சியில் மதுபாட்டில்களுக்கு...