சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். அங்கு பயிலும் மாணவ-மாணவிகள் 25 பேரிடம் கலந்துரையாடி அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தார்.
பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிசிடிவி கேமராக்கள், அவைகளின் செயல்பாடுகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆபிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும், மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் ஆளுநர் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆளுநர் ஆய்வு appeared first on Dinakaran.