×

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவிட்டானில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.32.50 கோடியில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் நியோ டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் விமானத்தில் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு கனிமொழி எம்பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேஎன் நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து மறவன் மடத்தில் உள்ள சத்யா ரிசார்ட் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

விழுப்புரம், திருப்பூர், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களையும் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுள் விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு கட்டடங்களில் மிக அளவில் 21 தளங்களுடன் கூடிய மாபெரும் டைடல் பூங்கா ஆகியவற்றை முதல்வர் அண்மையில் திறந்து வைத்தார்.

இவற்றை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டானில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 32.50 கோடி ரூபாய் செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. மார்க்கண்டேயன், சி. சண்முகய்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பி. ஜெகன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Tidal Neo Information Technology Park ,Tuticorin ,K. Stalin ,Thoothukudi ,Tidal Neo IT Park ,Neo Tidal Park ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மீளவிட்டானில் புதியதாக...