×

தூத்துக்குடியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார், 75 ஆயிரம் மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘புதுமை பெண் திட்டம்’ விரிவாக்கம்

சென்னை: தூத்துக்குடியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75 ஆயிரம் மாணவியர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கிடும் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளையும் நாளை தொடங்கி வைக்கிறார். புதுமை பெண் திட்டம் அரசு பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் ரூ. 1,000 வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது.

அதன்படி, தூத்துக்குடியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் பயனாக, தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் மாதம் ரூ.1,000 பெற்று பயனடைய உள்ளனர். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதுடன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்காக வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து புதிய தொழில்களுக்கான முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

இதுவரை ஏறத்தாழ ரூ.10 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் பயனாக, ஏறத்தாழ ரூ.31 லட்சம் இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்புகள் பெறும் நிலை உருவாகியுள்ளது. மேலும், கடந்த 40 மாதங்களில் பல்வேறு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியிலும் முதல்வர் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

விழுப்புரம், திருப்பூர், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களையும் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுள் விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு கட்டடங்களில் மிக அளவில் 21 தளங்களுடன் கூடிய மாபெரும் டைடல் பூங்கா ஆகியவற்றை முதல்வர் அண்மையில் திறந்து வைத்தார். இவற்றை தொடர்ந்து, தூத்துக்குடியில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.50 மணிக்கு திறந்து வைக்கிறார். இப்பூங்காவானது, வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட ரூ. 32.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க கூடியதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மேலும் ஒரு மைல் கல் திட்டமாக வடிவெடுத்துள்ளது. முதல்வரின் தூத்துக்குடி பயணம் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு ஆகிய நிகழ்ச்கிகள் வாயிலாக தூத்துக்குடி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

The post தூத்துக்குடியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார், 75 ஆயிரம் மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘புதுமை பெண் திட்டம்’ விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Mini Tidal Park ,Thoothukudi ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ரூ.32.50 கோடி...