சென்னை: சென்னையில் 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் இரண்டாம் கட்டமாக தீவிரத் தூய்மைப் பணிகள் நாளை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள்அகற்றப்பட்டு வருகிறது. மேலும், தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், பூங்காக்களில் தூய்மைப் பணிகள், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், பெருமளவு குப்பை சேகரமாகும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, அவ்விடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், சேதமடைந்த குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றாக புதிய குப்பைத் தொட்டிகள் வைத்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்தைப் பேணுகின்ற வகையிலும், தூய்மையான நகரமாக விளங்குகின்ற வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் அமைக்கப்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கடந்த ஆகஸ்டு 21ம் தேதி முதற்கட்டமாக தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், பயணியர் இருக்கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக 15 மண்டலங்களிலும் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும், நாளை காலை 6 மணி முதல் 8 மணி வரை ஒரேநேரத்தில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிகளில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தை சுத்தம் செய்து, பேருந்து நிழற்குடைகள் முழுவதையும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் கண்டு, அவற்றின் அளவீடுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
The post இரண்டாம் கட்டமாக நாளை 1,363 பேருந்து நிறுத்தங்களில் தீவிரத் தூய்மை பணி: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.