சென்னை: தேமுதிக அமைதி பேரணிக்கு காவல்துறை தடை விதித்த நிலையில், அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக அறிவித்து இருந்தார். அதன்படி கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தே.மு.தி.க திட்டமிட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக தொண்டகர்கள் குவிந்த நிலையில், இதனால் சென்னை கோயம்பேடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தே.மு.தி.கவின் அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
காவல்துறையினரின் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி மேற்கொண்டனர். இந்த நிலையில், தேமுதிக பேரணி விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திமுக சார்பில் விஜயகாந்தின் குருபூஜையில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்களின் மனங்களில் விஜயகாந்த் என்றென்றும் நிலைத்திருப்பார். விஜயகாந்தின் மீது மாறாத பற்றின் காரணமாகவே முதலமைச்சர் என்னை அனுப்பியுள்ளார். அனுமதி இல்லையென்றாலும் தேமுதிக பேரணி அமைதியாகவே நடைபெற்றுள்ளது. இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என கூறினார்.
The post தேமுதிக அமைதி பேரணிக்கு காவல்துறை தடை விதித்த நிலையில், அதனை பெரிதுபடுத்த வேண்டாம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.