×

தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களை பெற களஞ்சியம் செல்போன் ஆப் கட்டாயம்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

சேலம்: தமிழகத்தில் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களை பெற களஞ்சியம் செல்போன் ஆப் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: களஞ்சியம் செல்போன் ஆப் குறித்த பயிற்சி பெற பணியாளர்கள், அலுவலர்கள் விபரத்தினை இதுவரை அனுப்பிடாத மாவட்டங்கள், உடனடியாக அனுப்பிட வேண்டும்.

அனைத்து நிலை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 100 சதவீதம் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன், விடுமுறைக்கு விண்ணப்பிக்க, ஓய்வூதிய பலன்கள் கோரிட, பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட கருத்துருக்கள் அனுப்பிட, அனைத்து வகை முன்பணங்கள் மற்றும் பே-சிலிப் கோரிட பயன்படுத்த வேண்டும். அனைத்து நிலை அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்களது பிரதிமாத பே-சிலிப்பை களஞ்சியம் செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இச்செயலியின் பயன்பாடு 100 சதவீதம் நடைபெற வாய்ப்புள்ளது.

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு, இதனை வலியுறுத்துவதுடன் இது சார்ந்த முன்னேற்றம் சார்ந்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பண்டிகை முன்பணம், அனைத்து வகையான விடுப்புகளுக்கு இச்செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக அனைத்து அலுவலர், பணியாளர்களது அனைத்து வகையான விடுப்புகளையும் ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டும்.

வரும் 01.01.2025 முதல் தானாகவே விடுப்பு இருப்பு அப்டேட் ஆக உள்ளதால், ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஊதிய இழப்பு போன்றவற்றை பணிப்பதிவேட்டின்படி அப்டேட் செய்ய வேண்டும். பான், ஆதார் ஆகியவற்றை உடனடியாக அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் சரி செய்ய வேண்டும். ஜனவரி முதல் ஓய்வூதிய கருத்துருக்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். விடுப்பு ஒப்புதலை, அனைத்து நிலைகளிலும் மேப்பிங் செய்யப்பட வேண்டும்.

இதுவரை ஓய்வு பெற்றவர்கள், பங்களிப்பு திட்ட ஓய்வூதியர்களுக்கு பெற்று வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை, உடனடியாக விரைந்து பெற்று வழங்குவதுடன், இப்பொருளையும் தொடர் கண்காணிப்பில் வைத்திட வேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் களஞ்சியம் செயலியின் பயன்பாட்டினை அதிகப்படுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களை பெற களஞ்சியம் செல்போன் ஆப் கட்டாயம்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,of School Education ,Salem ,School ,Education ,Director of School Education ,Dinakaran ,
× RELATED வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி...