ஐதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் திரையிடலின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இன்று விசாரணை நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜரானார். பெண் உயிரிழந்த வழக்கில் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அல்லு அர்ஜுன் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு திங்கள்கிழமை (டிசம்பர் 30) விசாரணைக்கு வரக்கூடும். பெண் உயிரிழந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுன் டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டு நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், விசாரணைக்காக அல்லு அர்ஜூன் காணொலி வாயிலாக ஆஜரானார்.
முன்னதாக கைது செய்யப்பட்ட டிசம்பர் 13-ம் தேதியே அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. டிசம்பர் 14-ம் தேதி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் (டிச.4) ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கு ஒன்றில் புஷ்பா 2 தி ரூல் திரையிடப்பட்ட போது அல்லு அர்ஜுன் அத்திரையரங்குக்கு வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 35 வயது பெண் உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெண் உயிரிழப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் பெயரில் நடிகர் அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர் குழு, திரையரங்க நிர்வாகம் மீது பாரதிய நியாய சன்ஹிதா- வின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
The post புஷ்பா 2 படத்திற்கு வந்தபோது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கு: காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர் appeared first on Dinakaran.