ஊட்டியில் கடும் பனி மூட்டம்

*சுற்றுலா பயணிகள் குளிரில் அவதி

ஊட்டி : ஊட்டியில் நேற்று பிற்பகலுக்கு மேல் பனி மூட்டம் காணப்பட்டதால் குளிர் நிலவியது. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் வெம்மை ஆடைகளுடனே வலம் வந்தனர்.
ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீலகிரியில் கடும் உறை பனி காணப்படும்.

குறிப்பாக, ஊட்டி, அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கன், தொட்டபெட்டா, தலைகுந்தா போன்ற பகுதிகளில் உறை பனி தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். டிசம்பர் முதல் ஜனவரி மாதம் முடியும் வரை நாள் தோறும் உறைப்பனி காணப்படும். அதேபோல, அடிக்கடி பனி மூட்டம் காணப்படும்.

பொதுவாக பகல் நேரங்களில் கடும் வெயில் காணப்படும். இரவு நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படும். இதனால், பெரிதாக பொதுமக்களுக்கும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதிப்பு இருக்காது. அதேசமயம், பகல் நேரங்களில் பனி மூட்டம் காணப்பட்டால் கடும் குளிர் இருக்கும்.

ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக உறைப்பனி கொட்டி வருகிறது. இதனால், இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிர் நிலவுகிறது. அதேசமயம், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல், காலை முதல் பிற்பகல் வரை ஊட்டியில் கடும் வெயில் நிலவியது.

பிற்பகலுக்கு மேல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால், ஊட்டி நகரில் குளிர் காணப்பட்டது. அதேபோல, புறநகர் பகுதிகளிலும் குளிர் நிலவியது. பைக்காரா போன்ற பகுதிகளில் படகு சவாரி சென்றவர்கள் குளிரால் அவதிக்கு உள்ளாகினர். தொட்டபெட்டா போன்ற பகுதிகளிலும் கடும் குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர்.

மலர் நாற்று பாதுகாப்பில் ஊழியர்கள் தீவிரம் : ஊட்டியில், மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் நர்சரிகளில் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. தற்போது நாள் தோறும் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால், மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் உள்ளதால், இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும். இதனால், தற்போது தொட்டிகளில் நடவு செய்யப்படுள்ள பல்வேறு வகையான மலர் நாற்றுகள் கருகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மறைக்கப்பட்டு வருகிறது.

மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் தொழிலாளர்கள் மலர் செடிகளுக்கு தண்ணீர் தெளித்து மலர் செடிகள் பனியில் கருகாமல் காத்து வருகின்றனர். மேலும், பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களிலும் உள்ள புற்கள் கருகாமல் இருக்க ஸ்பிரிங்கலர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அலங்கார செடிகளும் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வைகளையும் கோத்தகிரி மிலார் செடிகளையும் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

The post ஊட்டியில் கடும் பனி மூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: