சுரண்டையில் 85 சிசிடிவி கேமராக்களுடன் கட்டுப்பாட்டு அறை திறப்பு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவிக்களின் பங்கு முக்கியமானது

*தென்காசி எஸ்.பி. சீனிவாசன் பேச்சு

சுரண்டை : சுரண்டையில் 85 சிசிடிவி கேமராக்களை இணைக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்து அதன்சேவையை துவக்கிவைத்து பேசிய தென்காசி எஸ்.பி. சீனிவாசன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் 3வது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களின் பங்கு முக்கியமானது என்றார்.

சுரண்டையில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களை இணைக்கும் கட்டுப்பாட்டு அறையின் திறப்பு விழா ஆலங்குளம் டிஎஸ்பி (பொ) மீனாட்சிநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில் முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி எஸ்.பி. சீனிவாசன், காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்து அதன்சேவையை துவக்கிவைத்தார். அப்போது அவர் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் போலீசாருக்கு பாராட்டுத் தெரிவித்து பேசுகையில் ‘‘ சைபர் க்ரைம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க தினமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் 3வது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களின் பங்கு முக்கியமானது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட இடங்களில் திருட்டு போன்ற குற்ற செயல்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. அதனால் குற்றங்களை தடுப்பதில் சிசிடிவி கேமராக்கள் சிறந்த இடத்தைப் பிடிக்கிறது.

காவல்துறையுடன் பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே குற்ற செயல்களை தடுக்க முடியும்.எனவே பொதுமக்கள் அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தெருக்கள், சாலைகள்,வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும், அவ்வாறு அமைப்பதால் அவர்களுக்கும் பாதுகாப்பு, சிசிடிவி கேமரா இருக்கும் பகுதியில் குற்றவாளிகள் வருவதில்லை.

தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் மட்டும் 1285 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.சுரண்டை காவல்நிலைய பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் விதமாக இதுவரை அமைக்கப்பட்ட 85 கேமராக்களை ஒருங்கிணைத்து காவல் நிலையத்தில் கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுரண்டை நகரம் காவல்துறையின் கழுகு பார்வையின் கீழ் வந்துள்ளது. இந்த கேமராக்களை 24 மணி நேரமும் காவலர்கள் காவல் நிலையத்தில் இருந்து கொண்டும்,தங்களது கைபேசியிலும் கண்காணிப்பாளர்கள்.

இதற்காக முயற்சி எடுத்த இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் காவலர்களுக்கு வாழ்த்துக்கள்’’ என்றார். நிகழ்ச்சியில் எஸ்.ஐ. கல்யாண சுந்தரம், காவலர்கள் முத்துக்குமார், தனிப்பிரிவு காவலர் ஜோதி முருகன் மற்றும் போலீசார் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குழந்தைகளை கண்காணிப்பது அவசியம்

தென்காசி எஸ்.பி. சீனிவாசன் மேலும் பேசுகையில் ‘‘பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. குறிப்பாக விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கி கொடுக்கக்கூடாது. விபத்தில் ஏதாவது உயிர் இழப்பு ஏற்பட்டால் பாதிக்கப்படுவது மாணவர்களும், அவர்கள் குடும்பத்தினருமே. எனவே பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகள் கையில் ஆன்ட்ராய்டு போன் கொடுக்க கூடாது. கல்விக்காக செல்போன்கள் பயன்படுத்தினாலும் அந்த செல்போன்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

புகையிலை குட்கா போன்ற பொருட்களை குழந்தைகள் பயன்படுத்துகிறார்களா என பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஒழுக்கமாக வளர்க்கப்படும் குழந்தைகளே குடும்பத்தின்,வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். பெண்கள் இள வயது திருமணம், பாலியல் ரீதியான பிரச்னைகள் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் அல்லது அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை அணுக வேண்டும்.

மேலும் தங்களது பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ,சமூக விரோத செயல்களில் யாரும் ஈடுபட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.சுரண்டையில் உள்ள சங்கரன்கோவில் ரோட்டில் காவல்துறைக்கு சொந்தமான இடத்தில் காவலர் கண்காணிப்பு அறை விரைவில் அமைக்கப்படும்’’ என்றார்.

The post சுரண்டையில் 85 சிசிடிவி கேமராக்களுடன் கட்டுப்பாட்டு அறை திறப்பு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவிக்களின் பங்கு முக்கியமானது appeared first on Dinakaran.

Related Stories: