விருத்தாசலம் : கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் விருத்தாசலம் மிகவும் இன்றியமையாத நகரமாகும். இங்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விருத்தாசலத்தை சுற்றியுள்ள சுமார் 200 கிராமங்களுக்கு விருத்தாசலம் தலைமையிடமாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள பரப்பளவு, மக்கள்தொகை உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு விருத்தாசலத்தை தனிமாவட்டமாக அறிவிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், பெண்ணாடம், தொழுதூர், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் வேப்பூர், தொழுதூர் உள்ளிட்ட நெடுஞ்சாலை பகுதிகளில் ஏற்படும் விபத்து சம்பவங்களுக்கு இந்த விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 150 படுக்கைகள், 25 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாவும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் கண்ட இடங்களில் நிறுத்தப்படுவதும், அவைகளை மர்மநபர்கள் திருடி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. மருத்துவமனை முன் உள்ள பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிக அளவில் நிறுத்தி வருவதால் நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே செல்ல வழி இல்லாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடத்தை அமைத்து தர வேண்டும், அந்த இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் அவதிப்படும் நோயாளிகள் appeared first on Dinakaran.