உறவினரின் நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம் கார்கள் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி: படுகாயமடைந்த 3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை

பூந்தமல்லி: உறவினரின் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை கூட்ரோடு அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், திண்டுக்கல் பகுதியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று அதிகாலை காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

இந்த காரில், சிறுவன் பாலா (10), சிறுமி ஹேமா (13), ஜெயா (30), இவரது தங்கை சரண்யா (25) மற்றும் தியா ஆகியோர் சென்றனர். சரண்யாவின் கணவர் கணபதி (30) என்பவர் காரை ஓட்டினார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை கூட்ரோடு அருகே சென்றபோது, எதிர் திசையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி, இவர்களது கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் 2 கார்களும் சுக்கு நூறாக நொறுங்கி, இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சக வாகன ஓட்டிகள், விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கணபதி (30), அதில் பயணம் செய்த பாலா (10), ஹேமா (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஜெயா (30), சரண்யா (25) மற்றும் தியாவையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கார் ஓட்டுனர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கார்கள் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post உறவினரின் நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம் கார்கள் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி: படுகாயமடைந்த 3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: