திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வைணவத் திருக்கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசமான ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 30.12.2024 முதல் 20.01.2025 வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான மோகினி அலங்காரம் ஜன.9 அன்றும், பரமபதவாசல் திறப்பு ஜன.10 அன்று விடியற்காலையிலும் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து இன்று (27.12.2024) ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகம், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அனுமதி அட்டைகள் வழங்குதல், பக்தர்களுக்கான கியூ வரிசை ஏற்பாடுகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், திருக்கோயிலில் வெளிப்புறங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைத்தல், பொது தகவல் அமைப்பு,
தூய்மைப் பணிகள், வாகன நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள், தீயணைப்பு வசதிகள் போன்ற பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதோடு, பக்தர்கள் விரைவாகவும், இலகுவாகவும் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட மேண்டுமென கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து, குமாரவயலூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அத்திருக்கோயிலுக்கு 2025 பிப்ரவரி 19 அன்று குடமுழுக்கு நடத்திடும் வகையில் பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சி.கல்யாணி, செ.மாரியப்பன், எ.ஆர்.பிரகாஷ், வருவாய் கோட்ட அலுவலர் சீனிவாசன், காவல்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், மாநகராட்சி கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், மாநகராட்சி உறுப்பினர் வி.ஜவஹர், காவல் ஆய்வாளர் வெற்றிவேல், வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் பல்வேறு துறை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.