சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை பஸ் சிக்னல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பஸ் சிக்னல் முன்னுரிமை அமைப்பு எம்.டி.சி. பேருந்தை கண்டறிந்து சிவப்பு சிக்னலின் கால அளவைக் குறைக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சிக்னல்களில் மாநகர பேருந்துகள் அதிக நேரம் நிற்பதை தவிர்க்கும் வகையில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சிக்னல் அருகே மாநகர பேருந்துகள் இருக்கும்போது பச்சை விளக்குகள் கூடுதல் நேரம் ஒளிரும் வகையில் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பேருந்து போக்குவரத்து நெரிசலில் அதிக நேரம் காத்திருக்கும் நிலை குறைந்து பயணிகளை சென்றடையவும், எரிபொருள் செலவை குறைக்கவும் இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் செல்லக்கூடிய பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தக்கூடிய பணியும், முக்கிய சிக்னல் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளும் நிறைவடைந்த சூழலில் ஜனவரி இறுதிக்குள் இத்திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: