முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது; தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது, இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றார். 2014ல் மீண்டும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற போது, 2வது முறையாக மன்மோகன் சிங் பிரதமரானார்.

தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக இருந்துள்ளார். 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த பிறகு, அவர் மாநிலங்களவை எம்பியாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 2019ல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டாக உடல்நலக் குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனாலும் கடந்த ஆண்டு டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, உடல் நலக் குறைவிலும் வீல் சேரில் வந்து வாக்களித்தார்.

இதற்கிடையே, 92 வயதை எட்டிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்ற மன்மோகன் சிங் அரசியலில் இருந்து முழுமையாக விலகினார். அதன் பின், ஓய்வில் இருந்த மன்மோகன் சிங்குக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல் அறிந்ததும், காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள கர்நாடகா மாநிலம் பெலகாவி சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டனர்.

டெல்லியில் இருந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இரவு 9.51 மணி அளவில் மன்மோகன் சிங் உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய பொருளாதாரத்தின் சிற்பியாக சிறந்த ஆளுமை கொண்ட அவரது மறைவு, காங்கிரஸ் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மன்மோகன் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* 3வது நீண்டகால பிரதமர்
மன்மோகன் சிங், மே 22, 2004 அன்று பிரதமராக பதவியேற்றார். மே 26, 2014 வரை தொடர்ந்து 2 முறை பதவி வகித்தார். இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மொத்தம் 3,656 நாட்களுக்குத் தலைமை தாங்கி, ஜவகர்லால் நேரு (6,130 நாட்கள்) மற்றும் இந்திரா காந்தி (5,829 நாட்கள்) ஆகியோரைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய மூன்றாவது பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது; தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: