- இந்தியா
- பாக்கிஸ்தான்
- வாஜ்பாய்
- பஞ்சாப்
- மாகாண
- சபாநாயகர்
- லாகூர்
- பஞ்சாப் மாகாண சட்டசபை
- மாலிக் அகமது கான்
- பஞ்சாப் மாகாணம்
லாகூர்: ‘இந்தியா-பாகிஸ்தான் உறவை அமைதிப் பாதையில் கொண்டு வருவதில் வாஜ்பாய் தவற விட்ட வாய்ப்பை நாம் மீண்டும் முயற்சிக்க வேண்டும்’ என பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை சபாநாயகர் மாலிக் அகமது கான் கூறி உள்ளார். கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு பேருந்தில் சென்றார். அங்கு நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டிற்கு பிறகு, வாஜ்பாயும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவில் திருப்புமுனை ஏற்படும் சூழலை உருவாக்கியது. ஆனால் அடுத்த சில மாதங்களில் எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலைத் தொடர்ந்து கார்கில் போர் வெடித்தது.
இந்நிலையில், வாஜ்பாயின் 100வது பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவரும், அந்நாட்டின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை சபாநாயகருமான மாலிக் அகமது கான் அளித்த பேட்டியில், ‘‘1999ல் வாஜ்பாய் லாகூர் சென்றது மிகச்சிறந்த தருணம். இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்ற அவரது முயற்சி தோல்வி அடைந்தது. ஆனாலும் வாஜ்பாய் வாய்ப்பை தவற விட்டாலும் அதை நாம் மீண்டும் முயற்சிக்க வேண்டும். வாஜ்பாயின் தொலைநோக்கு பார்வையை பின்பற்றி தற்போது பிரதமர் மோடி இந்தியாவில் ஆட்சி செய்கிறார். எனவே அமைதி நடவடிக்கையை மீண்டும் தொடங்க நல்ல வாய்ப்பு உள்ளது. இப்பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்துவது நல்ல யோசனை மட்டுமல்ல, வளர்ச்சி, செழிப்புக்கும் அவசியம்’’ என்றார். தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் வரை பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை என இந்தியா தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியா-பாக். உறவில் அமைதி வாஜ்பாய் தவற விட்ட வாய்ப்பை மீண்டும் முயற்சிக்க வேண்டும்: பஞ்சாப் மாகாண சபாநாயகர் பேச்சு appeared first on Dinakaran.