×

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் குறைபாடு சரி செய்யப்பட்டதா? மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில், மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா நேற்று ஆய்வு மேற்கொண்டார். ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 26ம் தேதி வெளியான சிஆர்எஸ் ஆய்வின் அறிக்கையில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதனை சரி செய்து 75 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் புதிய ரயில் பாலத்தின் பாதுகாப்பு மற்றும் உதவி திறனை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட புதிய கமிட்டி பாலத்தின் நிலை குறித்து ஆராய்ந்து வருகிறது. இதனிடையே இம்மாத துவக்கத்தில் இருந்து ரயில் பாலத்தில் குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய ரயில் பாலத்தில் நேற்று மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா டிராலியில் சென்று பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கர்டர்களின் இணைப்புகளை பார்வையிட்டு செங்குத்து தூக்கு பாலத்தின் அருகே ஆபரேட்டர் அறையில் இறங்கி ஆய்வு செய்தார்.

செங்குத்து பாலத்தின் தூண் உள்ளே உள்ள லிப்ட் மூலம் மேலே சென்று தூக்கு பாலத்தை உயர்த்தி, இறக்கி சோதனை செய்தார். சிஆர்எஸ் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். புதிய ரயில் பாலத்தின் உறுதித்திறனை ஆராய்வதற்கு அமைக்கப்பட்டிருக்கும் 5 பேர் கொண்ட புதிய கமிட்டியிடம் புதிய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பாலத்தில் புதிய ரயில் இயக்குவது குறித்து தகவல் வெளியாகும்.

The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் குறைபாடு சரி செய்யப்பட்டதா? மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pamban ,Madurai Divisional ,Rameswaram ,Madurai ,Divisional Manager ,Sarath Srivastava ,Dinakaran ,
× RELATED பாம்பன் புதிய ரயில் பாலத்தில்...