×

கன்னியாகுமரியில் பல வண்ணங்களில் லேசர் ஒளியில் ஜொலித்த திருவள்ளுவர் சிலை: கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் லேசர் ஒளியால் பல வண்ணங்களில் திருவள்ளுவர் சிலை ஜொலித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் குமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். கடந்த 2000வது ஆண்டு ஜனவரி 1ம் தேதி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு அதன் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

வரும் டிசம்பர் 30ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் பங்கேற்க கன்னியாகுமரி வருகை தருகிறார். இதையொட்டி திருவள்ளுவர் சிலை லேசர் ஒளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் சிலை லேசர் ஒளியில் பல வண்ணங்களில் ஒளிர செய்ததை சுற்றுலா பயணிகள் பலரும் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காலை முதலே சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர்.

அவர்கள் திரிவேணி சங்கம கடற்கரையில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டுகளித்தனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் சூரிய உதயத்தை புகைப்படம் எடுத்து கொண்டனர். இதையடுத்து கடலில் குடும்பத்தினருடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர். அசம்பாவிங்களை தவிர்க்க கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரியில் பல வண்ணங்களில் லேசர் ஒளியில் ஜொலித்த திருவள்ளுவர் சிலை: கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Christmas ,Tamil Nadu ,Kanyakumari.… ,
× RELATED கன்னியாகுமரியில் லேசர் ஒளியால்...