×

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும் என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இயேசு பிரான் அவதரித்த இந்த நாள் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும், வெற்றியையும், நிறைவையும் அளிக்கட்டும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் தலைவர்): மிக சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி, பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்தநாளில் உறுதி ஏற்போம்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): இயேசு கிறிஸ்துவின் அமுதமொழியை மனதில் கொண்டு இந்தியாவின் மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் இந்நாளில் உறுதி மேற்கொள்வோம். அன்பையும் பரிவையும் கனிவையும் நேசத்தோடு சக மனிதர்களிடம் பிரதிபலிக்கும் உணர்வுடன் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன்(தமாகா): அனைவரிடமும் அன்போடும், சகோதரத்துவத்தோடும், சகிப்புத்தன்மையோடும் அவற்றிற்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் இயேசு கிறிஸ்து. எல்லோரிடமும் அன்பு செலுத்துவோம், சகோதரத்துவத்தை வளர்ப்போம்.
அன்புமணி (பாமக தலைவர்): அனைவரும், அன்பு, உதவி, கருணை, சகோதரத்துவம், மகிழ்ச்சி, நல்லிணக்கம் ஆகியவற்றை அனைவருக்கும் வாரி வழங்குவோம். இந்த உலமே அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும்.
எர்ணாவூர் நாராயணன்( சமத்துவ மக்கள் கழகம் தலைவர்): கிறிஸ்துமஸ் என்றாலே அன்பையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரு விழா. இயேசு கிறிஸ்து போதித்ததை போலவே ஒருவர் மீது அன்பு கொண்டு மகிழ்ச்சியாய் வாழ இந்நாளில் வாழ்த்துகள்.

என்.ஆர்.தனபால் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்): இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மக்களுக்கு அமைதியை போதித்தது. அவருடைய நற்குணங்களையும், பண்புகளையும் ஏற்றுக்கொண்ட மக்கள் அவரை கடவுளாக போற்றி வருகிறார்கள்.
ரெ.தங்கம் (மாற்றுத்திறனாளர் முன்னேற்ற சங்கம்): கிறிஸ்துமஸ் நன்னாளில் மாற்றுத்திறனாளர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும், அறிவார்ந்த ஆற்றலும் வளம் மிகுந்த வாழ்வியல் முன்னேற்றமும் பெறட்டும்.

மு.பன்னீர்செல்வம் (தமிழ்நாடு ஐஎன்டியுசி): போட்டி, பொறாமைகள் ஒழிய வேண்டும். மனித நேயம் தழைக்க வேண்டும். இதை கடைப்பிடித்து ஏழ்மை அகல வேண்டும். இயோசு பிரான் போதித்த போதனைகள்படி நடந்தால் எந்நாளும் நன்நாளாக அமையும். அதுவே வாழ்க்கையின் வெற்றியாகும்.
இதே போல தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சசிகலா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சரத்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், புதிய நீதிக்கட்சி தலைவர் சி.சண்முகம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சைமுத்து,பிரசிடென்ட் அபூபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்), உள்ளிட்ட வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Christmas Day ,Chennai ,Christmas ,Edappadi Palaniswami ,AIADMK ,General Secretary ,Jesus ,
× RELATED கிறிஸ்துமஸ் கேக்! -வாசகர் பகுதி