நன்றி குங்குமம் தோழி
கிறிஸ்துமஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான். அப்படிப்பட்ட கேக்கிற்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் என்ன தொடர்பு? கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.பதினான்காம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் விஜில் என்னும் உண்ணா நோன்பு இருப்பதை மக்கள் கடைபிடித்து வந்தனர். இந்த நோன்பு இருப்பவர்கள் மறுநாள் சாப்பிடுவதற்கு செரிக்கக்கூடிய தன்மை உள்ளதுமான ஓட்ஸ் கஞ்சியை பருகுவர். இது பாரிட்ஜ் என அழைக்கப்பட்டது. இது சற்று கூழ் தன்மையுடனும் திடமானதாகவும், அதாவது, வெண்ணெய் போன்று இருந்தது. பின்னர் பதினாறாம் நூற்றாண்டில் வசதி படைத்தவர்கள் கோதுமை மாவில் உலர்ந்த பழங்களை சேர்த்து கேக்காக உருவாக்கினர். இதுவே நாளடைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வந்தது.
இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவு பிசைந்து கேக் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது குடும்பத் தலைவி ஒரு நாணயத்தை அந்த மாவுடன் கலந்து வைப்பார். இறுதியில் கிறிஸ்துமஸ் அன்று கேக் வெட்டி குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும். அப்போது அந்த நாணயம் யாருக்கு கிடைக்கிறதோ அவர் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார். அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரிசுகள் வழங்குவர். இதனால் கேக் தயாரிக்கப்பட்ட நாளில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை ஆரம்பித்துவிடும். குடும்ப உறுப்பினர்கள் அந்த நாணயம் யாருக்கு வரும் என்ற எதிர்பார்ப்போடு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவர்.
உலகிலேயே கிறிஸ்துமஸின் போது கிறிஸ்துமஸ் மரம் வைப்பது முதன் முதலில் ஜெர்மனியில்தான் துவங்கியது. பதினைந்தாம் நூற்றாண்டிலேயே அங்கு கிறிஸ்துமஸ் மரம் நடுவது பழக்கத்தில் இருந்துள்ளது. மரத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அலங்காரம் செய்வார்கள். நடுநடுவே ஆப்பிள், பலவிதமான கொட்டைகள், பேரீச்சம் பழம் போன்றவற்றை வைத்து குழந்தைகளுக்கு அவற்றை பரிசாக வழங்குவார்கள்.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் வைக்கும் கிறிஸ்துமஸ் மரத்தை ப்ளூரூம் என்பர். 1900ம் ஆண்டுகளிலேயே கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் உருவானது.
கிறிஸ்துமஸ் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? கிரேக்க மொழியில் கிறிஸ்டோல் என்றால் காப்பாற்ற அவதரித்தவர் என்று அர்த்தம். இப்போது வழக்கத்தில் இல்லாமல் இருப்பினும் ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் ‘மாஸ்’ என்ற வார்த்தைக்கு பண்டிகை அல்லது கொண்டாடுதல் என்னும் பொருள் இருந்து வந்தது. கிறிஸ்து என்ற வார்த்தையை சுருக்கமாக கிரேக்க மொழியில் X என்ற எழுத்தாலும் குறிப்பிட்டார். ஆகவேதான் கிறிஸ்துமஸ் என்பதை ஆங்கிலத்தில் X MAS என்று எழுதுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
The post கிறிஸ்துமஸ் கேக்! -வாசகர் பகுதி appeared first on Dinakaran.