தொடர்ந்து பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவானது. அதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் ‘பாக்சிங் டே’டெஸ்ட்டாக 4வது போட்டி நாளை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாட இந்தியா எஞ்சிய 2 டெஸ்ட்களிலும் வெற்றி பெற வேண்டிய சூழல் காணப்படுகிறது. தவிர, நாளை தொடங்கும் மற்றொரு போட்டியில் தென் ஆப்ரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும். ஆனால் இந்தியாவின் வெற்றிக்கு இடையூறாக ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் காணப்படுகிறார்.
அதிரடி இடதுகை ஆட்டக்காரரான ஹெட், ஆட்டத்தின் முடிவையே மாற்றும் ஆட்டத்திறன் கொண்டவர். நடப்புத் தொடரில் இதுவரை நடந்த 3 டெஸ்ட்களின் 5 இன்னிங்சில் ஹெட் 406 ரன் விளாசியுள்ளார். அதிக ரன் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர், ஒரு இன்னிங்சுக்கு சராசரியாக 81.80 ரன் எடுத்துள்ளார். டிராவிசுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள இந்திய வீரர் கே.எல்.ராகுல் 6 இன்னிங்சில் விளையாடி 235 ரன் எடுத்துள்ளார்.
இந்தியாவுடனான 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் டிராவிஸ் ஹெட் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், மெல்போர்னில் தொடங்கும் 4வது டெஸ்ட்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் 3, 4வது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் 7 நாட்கள் ஓய்வு இருந்த நிலையில் ஹெட் காயத்தில் இருந்து மீண்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து ஆஸி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், ‘ஹெட் ஆட்டத்திறனுடன் இருப்பதை பயிற்சியின் போது பார்த்திருப்பீர்கள். காயத்தின் பாதிப்பு அப்போது ஏதும் வெளிப்படவில்லை. நன்றாக ஓடுகிறார். அவரின் மருத்துவ அறிக்கைகளிலும் அச்சம் கொள்ள ஏதுமில்லை. அதனால் மெல்போர்ன் டெஸ்ட்டில் களமிறங்குவாரா என்ற கவலை இல்லை’ என்றார்.
The post இந்தியாவுடன் 4வது டெஸ்டில் டிராவிஸ் அதிரடி தொடரும்! காயத்தில் மீண்டதாக பயிற்சியாளர் தகவல் appeared first on Dinakaran.