கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுமார் ரூ2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை கடத்தி வந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே சிலர் திமிங்கலத்தின் எச்சத்தை விற்பனை செய்ய கொண்டு செல்வதாக, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகவன்ஜெகதீஷ் சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனத்துறையினர், டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே டூவீலரில் சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் திமிங்கலத்தின் எச்சம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்த விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த கரண்குமார்(24), முகமதுபகாத் (23) என்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து சுமார் ₹2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘கடலில் அலைகளால் கரைக்கு அடித்து வரப்படும் போது, திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே அம்பர்கிரீஸ் எனும் திரவம் சுரக்கிறது. இந்த திரவம் உருண்டையாக வடிவெடுக்கிறது. இந்த எச்சத்தை திமிங்கலம் தனது வாயில் இருந்து வாந்தியெடுக்கிறது.
இவ்வாறு திமிங்கலம் போடும் எச்சம் அல்லது வாந்தி, அம்பர் கிரீஸ் என்றழைக்கப்படுகிறது. இதனை நெருப்பினால் சூடு காட்டினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். அதனால், கடலில் உள்ள திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் இந்த திரவமானது, கள்ளச்சந்தைகளில் பல்வேறு வாசனை திரவியம் மற்றும் பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது’ என்றனர்.
The post ரூ2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் கடத்தி வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.