சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறும் தொழிற்சாலைகளால் மணலி பகுதியில் காற்று மாசு அதிகரிப்பு: நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்

திருவொற்றியூர்: வடசென்னைக்கு உட்பட்ட மணலி பகுதியில் ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறுகுறு தொழில் கூடங்கள், 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 16 நிறுவனங்கள் பல்வேறு ரசாயன கலவையுடன் கூடிய மூலப் பொருட்களை பயன்படுத்தி, உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் மூலப்பொருட்களை கையாள்வதில் சரியான விதிமுறைகளை கடைபிடிக்காததால் நிறுவனங்களின் புகை போக்கி வழியாக ரசாயன வாயுக்கள், நச்சுத் துகள்கள் போன்றவை வெளியேறி காற்றில் கலந்து காற்று மாசு ஏற்படுகிறது. இந்த நச்சுக் காற்றை சுவாசிக்கும் மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காச நோய், சுவாசக் கோளாறு, தோல் நோய், இதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களும், பெண்களுக்கு மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகிறது. இந்த நச்சுக் காற்று குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களுக்கு மனச்சிதைவும் ஏற்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த சமூக நல அமைப்புகள் தொழிற்சாலைகளில் உற்பத்தி கட்டமைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு உள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவு, திரவக் கழிவு, வாயுவை சரியாக கையாள்வதில்லை, விதிகளை மீறி புகையை வெளியேற்றி காற்று மாசு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதைத் தடுக்க மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுப்பதில்லை என கவலை தெரிவித்துள்ளது. மேலும் சில ரசாயன கலவையை அதிகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள் ரசாயன மூலப் பொருட்களை சரியாக கையாளததால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதை பயன்படுத்தும் குழந்தைகள் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைவு, கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘மணலியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வாகனப் புகை காரணமாக காற்றின் மாசு அதிகரித்து வருகிறது. காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரோ கிராம் அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு மைக்ரோ கிராம் உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது.

2.5 மைக்ரோ கிராம் அளவுள்ள துகள்கள் ஒரு கன மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவு மாசுவாகும். சென்னையில் மணலி பகுதியில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அமைத்துள்ள காற்று மாசு கண்காணிப்பு மையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பதிவான அளவுகளின்படி, இது சராசரியாக 362 மைக்ரோ கிராமாகவும், அதிகபட்சமாக 500 மைக்ரோ கிராமாகவும் பதிவாகி இருந்தது. மேலும் வாகன புகை, புழுதி மண்டலமாக காட்சியளிக்கும் சாலைகள் காரணமாகவும் காற்று மாசு ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் காற்று மாசு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு காற்று மாசு தொடர்பான விவரங்களை ஆன்லைனில் வெளியிடுவதை மாசுக்கட்டுப்பாடு வாரியம் முறையாக கடைபிடிப்பதில்லை என கூறப்படுகிறது.

எனவே மணலி மட்டுமின்றி தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று மாசுவை கட்டுப்படுத்தி சுற்று சூழலையும், பொதுமக்களையும் பாதுகாக்க மாசு கட்டுப்பாடு வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாசு ஏற்படுத்துவோர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்,’’ என்றனர். இந்நிலையில் மாசடைந்த காற்றை சுத்திகரிக்க இத்தாலி நாட்டில் உள்ள அமைப்புடன் இணைந்து ‘பைலட் திட்டம்’ ஒன்றை ஒரு சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. அதன்படி மணலி பகுதியில் காற்றின் மாசு அளவை கண்டறிய மணலி மண்டல அலுவலகம் மற்றும் பாடசாலை தெருவில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இரு இடங்களில் நவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் பதிவாகும் அளவுகளை குறிப்பெடுத்து அதன் அடிப்படையில் வரும் மார்ச் மாதம் மணலி பகுதிகளில் காற்றை சுத்திகரித்து மீண்டும் காற்றில் கலந்துவிடும் நவீன இயந்திரம் வைக்கவும், இத்திட்டம் வெற்றி பெற்றால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் துணையுடன் காற்று மாசு கண்டறியப்படும் அனைத்து பகுதிகளிலும் நவீன இயந்திரத்தை பொருத்தி விரிவுபடுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், சென்னை, மணலியில் முதன் முதலாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்திட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மணலியில் ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை உரத் தொழிற்சாலை, எம்எப்எல் நிறுவனம், நாப்தா திரவம், அமோனியா, யூரியா போன்ற பல்வேறு மூலப்பொருட்களை கொண்டு விவசாயத்திற்கு தேவையான உரங்களை தயார் செய்கிறது. 1966ம் ஆண்டு அப்போதைய தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு தொடங்கப்பட்டது.

தொழிற்சாலை துவங்கிய காலகட்டத்தில் சுற்று வட்டாரத்தில் சுமார் 3 கிமீ தூரத்திற்கு குடியிருப்புகள் மிகவும் குறைவு. மரம், செடிகள் என ஏராளமாக இருந்தன. இதன் காரணமாக இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறக்கூடிய காற்று மாசு இயற்கை வளங்களால் சுத்திகரிக்கப்பட்டு சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் தற்போது படிப்படியாக நிறுவனத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் தோன்றிவிட்டன. இங்கிருந்த பசுமையான மரங்கள் அழிந்துவிட்டன. இதனால் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசு காற்றில் கலந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அவ்வப்போது நிறுவனத்தின் புகைப்போக்கி வழியாக அம்மோனியா வாயு வெளியேறுவதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சென்னை உரத் தொழிற்சாலையில் இயந்திரங்களும், உற்பத்தி கட்டமைப்புகளும் பழமையாக இருப்பதால் அமோனியா, ஹைட்ரஜன் புளோரைடு போன்ற விஷ வாயுக்கள் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. மணலி பகுதியில் காற்றில் நச்சுத்தன்மை கலந்திருப்பதற்கு எம்எப்எல் ஒன்றிய அரசு நிறுவனமே பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனம் பெரும்பாலும் அமோனியாவை உமிழ்கிறது என்பதை கண்டறிந்து மாசு குறித்து ஆன்லைன் மூலம் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும் என்ற விதியை சரியாக கடைபிடிப்பதில்லை.

இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றாத இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிந்திருந்தும் அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. ஒன்றிய அரசு இந்த நிறுவனத்தின் மீது கூடுதல் முதலீடு செய்ய முன்வராததால் பழைய கட்டமைப்பிலேயே நிறுவனம் இயக்கப்படுகிறது. இதனால், அமோனியா வெளியேறி மக்கள் சுவாசிக்கும் காற்று நஞ்சாகி உள்ளது. இந்த நிறுவனத்தின் மிக மோசமான கட்டமைப்பில் உள்ளது. இப்பகுதியில் எதிர்பாராத விதமாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் அவற்றை தாங்கக்கூடிய, உறுதி தற்போது உள்ள எம்எப்எல் நிறுவன கட்டுமானம் மற்றும் கட்டமைப்பிற்கு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

இதனால் அம்மோனியா வெளியேறி போபால் போல மணலியிலிலும் மோசமான விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அமோனியா வாயு கசிவு, காற்று மாசு ஆகியவற்றை தடுக்க இந்த எம்எப்எல் தொழிற்சாலையின் கட்டமைப்பை ஒன்றிய அரசு நவீனப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

அமில மழை
மணலி சுற்று வட்டாரப் பகுதிகளில் நைட்ரஜன், ஆக்சைடுகள் மற்றும் சல்பர் ஆக்சைடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலந்திருப்பதால் மழைக் காலத்தில் இந்த விஷ வாயுக்கள் கலந்து அமிலமழை பொழிகிறது. இந்த காற்று மாசு குறைந்த வயதிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. இதுபோன்ற காற்று மாசுவால் உலக அளவில் ஆண்டுக்கு 42 லட்சம் பேர் பல்வேறு நோய்களால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் மணலி பகுதிகளில் அமிலம் கலந்த மழைநீர் பொழிவது குறித்து இதுவரை எந்த ஆராய்ச்சியும் செய்யப்பட்டதாக தெரியவில்லை.

நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மணலி சின்னசேக்காடு பல்ஜி பாளையம் பகுதியில் இயங்கி வந்த தனியார் பலகை கட்டுமான தொழிற்சாலையில் அதிகமாக சத்தம் வருவதால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தொழில் விதிமுறைகளை கடைபிக்கவில்லை எனக்கூறி பொது சுகாதார சட்டம் 1939 போன்ற பல்வேறு சட்ட சரத்துகளை குறிப்பிட்டு கடந்த 6ம் தேதி மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த தொழிற்சாலையை பூட்டி சீல் வைத்ததோடு, இதனை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒரு சாதாரண நிறுவனத்திற்கு இத்தனை சட்டங்களை பயன்படுத்தும்போது, மணலியில் ஒன்றிய அரசின் உரம் தயாரிக்கும் எம்எப்எல், கச்சா எண்ணெய் சுத்திகரித்து எரிபொருள் மற்றும் பல்வேறு ரசாயன மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிபிசிஎல் மற்றும் தனியார் நிறுவனங்கள் சட்ட விதிகளை முழுயாக கடைப்பிடிக்காமல் இயக்குகிறதே, இதன்மீது மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது சாமானிய மக்களின் கேள்வியாக உள்ளது.

சிஎஸ்ஆர் நிதியில் முறைகேடு
மணலியில் ரசாயன மூலப் பொருளைக் கொண்டு சோப்பு ஆயில் தயாரிக்கும் தனியார் நிறுவனம் சுத்திகரிக்கப்படாத அதன் கழிவுகளை லாரியின் மூலம் எடுத்துச் சென்று ஆந்திராவில் உள்ள குவாரியில் வெளியேற்றுவதாக கூறிவிட்டு இங்குள்ள மாநகராட்சி சுத்திகரிப்பு மையம் மற்றும் சாலையோரம் உள்ள கால்வாயில் விட்டுவிடுகின்றனர். இதனால் நீர், மண் வளம் மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் மணலியில் உள்ள நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாசு மற்றும் கழிவுகளால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை சரி செய்ய தங்களுடைய லாபத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சமூக மேம்பாட்டிற்காக (சிஎஸ்ஆர் நிதி) பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விதி உள்ளது.

ஆனால் இதன்படி ஒரு சில நிறுவனங்கள் மக்கள் நல திட்டங்களுக்காக ஓரளவு செய்கிறது. ஆனால் பல நிறுவனங்கள் இந்த விதிகளை பின்பற்றாமல் அந்த நிதியை அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செலவு செய்கின்றனர். ஆனால் இதுபோன்ற நிறுவனத்தில் இருந்து வரக்கூடிய காற்று மாசு போன்ற பிரச்னைகளை சரிசெய்ய அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

The post சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறும் தொழிற்சாலைகளால் மணலி பகுதியில் காற்று மாசு அதிகரிப்பு: நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: