மதுரை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை: ஆர்டிஐ மூலம் தகவல்

மதுரை: மதுரை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்திருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. மதுரையில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர், அவைகளைப் பிடித்துச் சென்று கருத்தடை செய்து, திரும்பவும் அதே இடத்தில் விட்டு வருகின்றனர். இதனால், நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சி அலுவலக பொது தகவல் அலுவலர் டாக்டர் இந்திராவிடம் தகவல்கள் பெற்றுள்ளார்.

இதில், 2020 ஜன 1 முதல், இதுவரை கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்களின் விபரம் தெரிய வந்துள்ளது. இதன்படி, 2020ல் 2571 நாய்கள், 2021ல் 1750 நாய்கள், 2022ல் 2123 நாய்கள், 2023ல் 1754 நாய்கள், 2024ல் ஜூலை வரை 1332 நாய்கள் என மொத்தம் 9,530 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இந்த டிசம்பர் வரை கணக்கிடும்போது, 10 ஆயிரம் நாய்களை கடந்திருக்கும். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் வெறிநாய் கடிபட்டவர்கள் என புகார் ஏதும் வரவில்லை. கருத்தடை செய்யாமல் தெருவில் திரியும் நாய்கள் எண்ணிக்கையை கணக்கீடு செய்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 20 முதல் 30 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மதுரையில் தெருநாய்களுக்கான கருத்தடை மையங்கள் செல்லூரில் உள்ள பழைய மாநகராட்சி வாகன காப்பகத்திலும், அவனியாபுரம் அருகே வெள்ளக்கல்லிலும் செயல்பட்டு வருவதாகவும், ஏடபிள்யுபிஐ பிசிஏ ஆக்ட் 1960, ஏபிசி ரூல்ஸ் 2023 சட்டங்களின் கீழ் இந்த கருத்தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை: ஆர்டிஐ மூலம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: