அரையாண்டு விடுமுறையால் ‘கொடை’யில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: தங்கும் விடுதிகள் ‘ஹவுஸ்புல்’


கொடைக்கானல்: அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நிலவும் உறை பனி சீசன் காலத்தில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் துவங்காத உறைபனி சீசன் தற்போது மாதக் கடைசியில் மிக தாமதமாக துவங்கியுள்ளது. மிக தாமதமாக துவங்கினாலும், உறைபனியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு பகுதிகளில் உறைபனி வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் குவிந்தனர். இன்று காலை இதமான சூழல் நிலவியது. இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் நகரின் மைய பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயின்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகை ஜனவரி மாதம் முதல் வாரம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆகியுள்ளன.

The post அரையாண்டு விடுமுறையால் ‘கொடை’யில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: தங்கும் விடுதிகள் ‘ஹவுஸ்புல்’ appeared first on Dinakaran.

Related Stories: