அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழ்நாட்டில் அரசு பார்மசி கல்லூரிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே பார்மசி கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கல்லூரிகளில் படித்த எனக்கு அரசுதான் வேலை தர வேண்டும் என மனப்போக்கு மாணவர்களிடையே உள்ளது, அது தவறில்லை, ஏராளமான தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளன. அதனையும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். தற்போது படிக்கும் மருத்துவ மாணவர்களின் தகுதி, திறமையை கொண்டு படிப்பை முடித்த பின் அவர்களுக்கான காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அண்மையில் 946 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றபிறகு 24,000 மருத்துவம் சார்ந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெற்றிருக்கின்றன.
முதல்வர் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 1000 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். எனவே மக்கள் மருந்தகத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மரு.கே.நாராயணசாமி, பதிவாளர் கே.சிவசங்கீதா, இந்திய மருந்தியல் கழகத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன், துணை தலைவர் ஜெயசீலன், மருந்தியியல் கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழகத்தில் பார்மசி கல்லூரிகளை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.