இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் 2 ஆயிரத்து 624 கிமீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மூலமாகவே வடிகின்றன. இந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் ஓட்டேரி நல்லா கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் உள்ளிட்ட 33 கால்வாய்களில் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த 33 கால்வாய்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இவற்றில் மழைநீர் இயல்பாக வழிந்தோடினாலே மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். மழை காலங்களில் கால்வாய்களில் அதிக நீர் செல்லும்போது, கால்வாய்களின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலங்களில் பொதுமக்கள் வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகள், வீட்டு தலையணைகள், பாய்கள், காலணிகள், பாலியஸ்டர் துணிகள் போன்றவை அடைத்து, வெள்ளநீர் செல்வதை தடுக்கிறது. இதன் காரணமாக கால்வாய் கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் புகுந்து வெள்ள பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
தினமும் வீடு வீடாக வரும் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் மட்டுமே மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வீசி எறியக்கூடாது என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்தவித பலனில்லை. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பெரும்பாலானோர் இன்னும் குப்பை கழிவுகளை கால்வாய்களிலும், பொது இடங்களிலும் வீசி எறிந்து விட்டு செல்கின்றனர். இப்படி கால்வாய்களில் குப்பை கழிவுகள் வீசப்படுவதை தடுக்க மாநகர பகுதியில் பாயும் 75 கி.மீ. நீள கால்வாய்களின் இருபுறங்களிலும் வலுவான சுவர்களை உயரமாக எழுப்பி, வெள்ளநீர் கரைகளில் பாய்வதை தடுக்க இருக்கிறோம்.
பொதுமக்கள் வீசி எறியும் குப்பை கழிவுகளால் கால்வாய் அடைத்துக்கொள்வதை தடுக்க, கால்வாய்கள் முழுவதும் வலைகளை கொண்டு மூடப்படும். அவற்றின் மீது குப்பையை வீசி எறிந்தால், அவை தனியாக சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மாநகர பகுதியில் வெள்ள பாதிப்பு குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ‘‘பொதுமக்கள் வீசி எறியும் குப்பை கழிவுகளால் கால்வாய் அடைத்துக்கொள்வதை தடுக்க, கால்வாய்கள் முழுவதும் வலைகளை கொண்டு மூடப்படும். அவற்றின் மீது குப்பையை வீசி எறிந்தால், அவை தனியாக சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
The post குப்பை கழிவுகளை வீசுவதை தடுக்க கால்வாய்களின் இருபுறமும் வலுவான, உயரமான சுவர்: சென்னை மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.