நகராட்சி தேர்தலில் பின்னடைவு; பஞ்சாப்பில் ஆம்ஆத்மிக்கு எச்சரிக்கை மணி!: 5ல் 1 நகராட்சியை மட்டுமே கைப்பற்றியது

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் நடந்த 5 நகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி ஒரு நகராட்சியை மட்டுமே பெரும்பான்மை பலத்துடன் பெற்றது. மற்ற இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளதால், அக்கட்சிக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் ஆம்ஆத்மியின் முதல்வராக பகவந்த் மான் தலைமையிலான அரசு, சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியது. ஐந்து நகராட்சிகளில் ஒன்றான பாட்டியாலாவில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சிக்கு முழுமையான பெரும்பான்மை கிடைத்துள்ளது.

ஜலந்தர் மற்றும் லூதியானாவில் ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் பகவந்த் மானின் தொகுதியான சங்க்ரூரில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சங்க்ரூரில் மொத்தமுள்ள 29 இடங்களில் ஏழு இடங்களை மட்டுமே ஆம்ஆத்மியால் வெல்ல முடிந்தது. பாஜக 9 இடங்களிலும், காங்கிரஸ் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றன. பாட்டியாலாவில் 60 வார்டுகளில் ஏழு வார்டுகளில் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆம் ஆத்மி 35 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தலா நான்கு இடங்களில் வெற்றி பெற்றன. எஸ்ஏடி இரண்டு இடங்களை வென்றது.

ஆம் ஆத்மி கட்சியின் எட்டு கவுன்சிலர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். லூதியானாவில் மொத்தமுள்ள 95 தொகுதிகளில் 41 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அமிர்தசரஸில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஜலந்தரில் 85 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 39 இடங்களை வென்றது.

காங்கிரஸ் 34 இடங்களை கைப்பற்றியது. ஐந்து நகராட்சி தேர்தலிலும் ஆம்ஆத்மி கட்சி பாட்டியாலாவில் முழு பெரும்பான்மையும், ஜலந்தர், லூதியானா தனிப் பெரும்கட்சியாகவும், சங்க்ரூர், அமிர்தசரஸ் ஆகிய நகராட்சிகளில் பலமிழந்த நிலையில் உள்ளது. 5 நகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி ஒரு நகராட்சியை மட்டுமே பெரும்பான்மை பலத்துடன் பெற்றது. மற்ற இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளதால், அக்கட்சிக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

The post நகராட்சி தேர்தலில் பின்னடைவு; பஞ்சாப்பில் ஆம்ஆத்மிக்கு எச்சரிக்கை மணி!: 5ல் 1 நகராட்சியை மட்டுமே கைப்பற்றியது appeared first on Dinakaran.

Related Stories: