மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக – சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது. முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் ஆகியோர் கடந்த 5ம் தேதி பதவியேற்றனர். மீண்டும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக அவருக்கு விட்டுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து கடந்த 15ம் தேதி 39 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உள்துறையை (சட்டம் ஒழுங்கு) மீண்டும் (துணை முதல்வராக இருந்த போதும் இதே துறையை கவனித்துக் கொண்டார்) கைவசப்படுத்திக்கொண்டார். மேலும், எரிசக்தி, சட்டம் மற்றும் நீதிமன்றம், பொது நிர்வாகம், தகவல் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளை அவரே நிர்வகிக்கவுள்ளார்.
துணை முதல்வர்களாக பதவியேற்ற அஜித் பவாருக்கு அவர் ஏற்கெனவே வகித்த நிதித்துறை மற்றும் திட்டம், மாநில கலால் துறையும், முதல்வராக இருந்து துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் பொதுப்பணி துறை ஆகிய 3 அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் உள்துறை இலாகா தங்கள் வசம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சிவசேனா (ஷிண்டே அணி) கூறி வந்த நிலையில், ‘டம்மி’ இலாகாவை ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்கியது கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாஜகவைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களுக்கு வருவாய், நீர் வளங்கள், உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி, நாடாளுமன்ற விவகாரங்கள், வனம், சுற்றுப்புறச்சூழல், பிற்படுத்தப்பட்டோர் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிவசேனாவை சேர்ந்த அமைச்சர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலன், குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு, தொழிற்சாலை மற்றும் சமூக நீதி உள்ளிட்ட துறைகளும், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு வேளாண்மை, மருத்துவக் கல்வி, உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாடு, உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு பின்னர் முதல்வர் யார்? என்பதை அறிவித்தனர். அப்போது பாஜகவுக்கும், ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே இழுபறி பேச்சுவார்த்தைகள் நடந்தன. டெல்லி வரை சென்றும் பிரச்னைகள் ஓயவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் ஏக்நாத் ஷிண்டேவை சரிகட்டினர். இருந்தாலும் உள்துறையை எதிர்பார்த்த ஷிண்டேவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனை அவரது கட்சியினர் மட்டுமின்றி எதிர்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
The post ஓரம்கட்ட வேண்டும் என்று நினைத்ததை அரங்கேற்றிய பாஜக; உள்துறையை எதிர்பார்த்த ஷிண்டேவுக்கு ‘டம்மி’ இலாகா: சிவசேனா மட்டுமின்றி எதிர்கட்சிகளும் விமர்சனம் appeared first on Dinakaran.