புஷ்பா-2 கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜூன் சொல்வது பொய்: புதிய வீடியோ வெளியிட்ட போலீஸ்!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா-2 படத்தின் சிறப்பு காட்சியின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்த சம்பவத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் காரணம் என்று குற்றச்சாட்டி வரும் போலீஸ் அதற்கு ஆதாரமாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐதராபாத் திரையரங்கில் கடந்த 4ம் தேதி இரவு திரையிடப்பட்ட புஷ்பா-2 சிறப்பு காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்தார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 32 வயதான ரேவதி என்ற பெண் மரணமடைந்தார். அவரது 9 வயது மகன் சுய நினைவை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த துயர சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் காரணம் என்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையிலேயே குற்றம் சாட்டியிருந்தார். இதற்கிடையே கைதாகி ஜாமினில் வெளியே உள்ள அல்லு அர்ஜுனுக்கு எதிராக ஐதராபாத் இஸ்மானிய பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அல்லு அர்ஜுன் வீட்டின் மீது மாணவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரையரங்கில் பெண் ஒருவர் உயிரிழந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் என்று ஐதராபாத் போலீஸ் குற்றச்சாட்டி இருந்ததை அவர் திட்டவட்டமாக மறுத்து இருந்தார்.

தாம் திரையரங்கிற்குள் இருந்த போது தம்மிடம் போலீஸ் வரவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். அத்துடன் போலீஸ் அறிவுறுத்தியது போன்று தாம் நடந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இந்த அனைத்து விளக்கங்களையும் பொய்யாக்கும் வகையில் போலீஸ் தரப்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டதோடு, சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. திரையரங்கிற்கு வரும் போது காரின் திறந்தவெளி மேற்கூரையில் நின்று நடிகர் அல்லு அர்ஜுன் கையசைத்தது புதிய வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் திரையரங்கிற்குள் வருவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் நெரிசல் இல்லாமல் இருந்ததும், தனது மகனுடன் ரேவதி உயிருடன் நல்ல நிலையில் நின்று இருந்தது உறுதியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் உள்ளே வந்த உடன் அவருடன் வந்த தனியார் பாதுகாவலர்கள் கூட்டத்தினரை தள்ளிவிடுவதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அதை தொடர்ந்து பால்கனியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் தெரிந்தும் 2 மணி நேரம் திரையரங்கிற்குள்ளேயே அல்லு அர்ஜுன் இருந்துள்ளார். வேறு வழியின்றி அவரை போலீஸ் வெளியே கொண்டுவரும் காட்சியும், அப்போதும் கூட அவர் ரசிகர்களை பார்த்து கையசைக்கும் காட்சியும் புதிய வீடியோவில் பதிவாகியுள்ளது. பெண் இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் என்ற போலீசாரின் குற்றச்சாட்டிற்கு இந்த வீடியோ காட்சிகள் வலுசேர்ப்பதாக உள்ளன.

The post புஷ்பா-2 கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜூன் சொல்வது பொய்: புதிய வீடியோ வெளியிட்ட போலீஸ்!! appeared first on Dinakaran.

Related Stories: