அருவிகுத்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி மாணவர்கள் பலி

மூணாறு : இடுக்கி மாவட்டம் அருவிகுத்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் கொல்லம் பத்தனாபுரத்தை சேர்ந்தவர் அக்சா ரெஜி(18), இடுக்கி முறிக்காச்சேரி பகுதியை சேர்ந்தவர் டொனால் ஷாஜி (22). இவர்கள் இருவரும் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள முட்டம் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் 2 பேரையும் நேற்று முன் தினம் மதியம் முதல் காணாததால் சக மாணவ-மாணவிகள் தேடினர்.

அவர்களது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முட்டம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிகுத்து நீர்வீழ்ச்சி அருகே இருவரின் தொலைபேசியும் கரையோரம் கண்டெடுக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து போலீசார் மற்றும் தொடுபுழாவில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் இரவு 7.30 மணி அளவில் டொனால் ஷாஜி மற்றும் அக்சா ரெஜி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரும் குளிப்பதற்கு இறங்கிய போது விபத்துக்குள்ளாகி இறந்தது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கூடுதல் தகவல்கள் தெரியவரும்.இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

The post அருவிகுத்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: