×

இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு குவைத்தின் மிக உயரிய விருது: மன்னர் ஷேக் மெஷல் வழங்கினார்

குவைத் சிட்டி: இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்தியதற்காக, குவைத் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டின் மன்னர் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாஹ், பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இரு தலைவர்கள் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக குவைத் நாட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். 43 ஆண்டுக்குப் பிறகு குவைத் செல்லும் இந்திய பிரதமர் என்பதால் மோடியின் இப்பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அங்கு நேற்று முன்தினம் இந்திய வம்சாவளிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து, நேற்று அவர் மன்னர் அமீர் ஷேக் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாஹ்வை சந்திக்க பயான் அரண்மனைக்கு வந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. குவைத் பிரதமர் அகமது அப்துல்லா அல்ஜபெர் அல்-சாலஹ் நேரில் வந்து வரவேற்றார். பிரதமர் அகமது அப்துல்லாவையும், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் அல் சபாஹ்வையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, குவைத்தின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல்-கபீர்’ விருதை பிரதமர் மோடிக்கு குவைத் மன்னர் வழங்கி கவுரவித்தார். இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதில் மோடி ஆற்றிய பங்களிப்பிற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன் இவ்விருது, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போன்ற வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் பிரதமர் மோடி பெறும் 20வது விருது இது. இதற்கு முன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளும் அவருக்கு விருது வழங்கி உள்ளன.

இவ்விருதை பெற்ற பிரதமர் மோடி, குவைத்தில் உயரிய விருது வழங்கப்பட்டதை எண்ணி பெருமைப்படுவதாகவும் இவ்விருதினை இந்திய மக்களுக்கும், இந்தியா-குவைத் இடையேயான வலுவான நட்புறவுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, குவைத் மன்னர் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாஹ் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், இரு தரப்பு உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்து கவனம் செலுத்திய இரு தலைவர்களும், வரலாற்று ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், பின்டெக், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவை மேலும் மேம்படுத்தவும் உறுதி அளித்தனர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘குவைத் அமீர் உடனான சந்திப்பு மிகச்சிறப்பாக அமைந்தது.

முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம். வரும் காலங்களில் எங்கள் நட்பு இன்னும் செழிக்கும் என நான் நம்புகிறேன்’’ என்றார். மேலும், குவைத்தில் வாழும் 10 லட்சம் இந்தியர்களின் நலன் மீது அக்கறை கொண்டிருப்பதற்கு மன்னர் ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து, இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். குவைத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியர்களின் பங்களிப்பிற்கு மன்னர் ஷேக் மெஷல் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

* யோகா பயிற்சியாளரை சந்தித்த பிரதமர் மோடி
குவைத்தில் முதல் முறையாக உரிமம் பெற்று ‘தாரத்மா’ எனும் யோகா பயிற்சி மையத்தை நடத்தி வரும் ஷாய்கா ஏஜே அல் சபாஹ்வை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இது குறித்து அவர் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘குவைத்தில் ஷாய்கா அல் சபாஹ்வை சந்தித்தேன். யோகா மற்றும் உடற்பயிற்சி மீது கொண்ட ஆர்வத்தின் மூலம் அவர் தனித்துவமாகத் திகழ்கிறார்.

சொந்தமாக யோகா பயிற்சிப் பள்ளியை நிறுவியுள்ளார். இளைஞர்கள் மத்தியில் யோகாவை பிரபலப்படுத்தும் அவரது முயற்சிகள் குறித்து பேசினோம்’’ என கூறி உள்ளார். 2 நாள் குவைத் பயணத்தை நேற்றுடன் முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டார்.

* இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக குவைத் உள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் சுமார் 88 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளது.

* குவைத், இந்தியாவின் 6வது பெரிய கச்சா எண்ணெய் சப்ளை நாடாகும்.

* நாட்டின் எரிபொருள் தேவையில் 3 சதவீதத்தை குவைத் பூர்த்தி செய்கிறது.

* குவைத் நாட்டிற்கு இந்தியாவின் ஏற்றுமதி முதல் முறையாக ரூ.16,500 கோடியை தாண்டி உள்ளது. இந்தியாவில் குவைத் ரூ.84 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளது.

* இதற்கு முன் கடைசியாக கடந்த 1981ல் இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது குவைத் சென்றுள்ளார்.

The post இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு குவைத்தின் மிக உயரிய விருது: மன்னர் ஷேக் மெஷல் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Kuwait ,King Sheikh Meshal ,KUWAIT CITY ,KING ,AMIR SHEIKH MESHAL AL-AHMAD AL-JABAR AL-SABAH ,Dinakaran ,
× RELATED இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்