×

ஆட்சி கவிழும் அபாயம் கனடா பிரதமர் ட்ரூடோ மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: கூட்டணி கட்சி அறிவிப்பு

டொரண்டோ: கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூட்டணி கட்சி அறிவித்துள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்து வருகின்றார். ட்ரூடோ ஆட்சியில் நீடிப்பதற்கு கூட்டணி கட்சிகளில் ஒன்றான நியூ டெமாக்ரடிக் கட்சி ஆதரவு அளித்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் ட்ரூடோவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக நியூ டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றது. கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிவித்து இருக்கின்றார். இதன் காரணமாக தேர்தல் நடைபெற்றாலும் ஆளும் லிபரல் கட்சி படுதோல்வியை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் ஜக்மீத் சிங் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘அடுத்த ஆண்டு ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். லிபரல் கட்சியினர் மற்றொரு வாய்ப்புக்கு தகுதியற்றவர்கள். எனவே தான் இந்த அரசினை வீழ்த்துவதற்கு என்டிபி வாக்களிக்கும். கனடா மக்களுக்காக பணியாற்றும் அரசுக்காக வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான கிறிஸ்டியா ப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக பிரதமர் ட்ரூடோ பின்னடவை சந்தித்தார். அவருக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் லிபரல் கட்சியின் 21 எம்பிக்கள் அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் கூட்டணியில் இடம்பெற்று இருந்த என்டிபியின் இந்த அறிவிப்பு பிரதமருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆட்சி கவிழும் அபாயம் கனடா பிரதமர் ட்ரூடோ மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: கூட்டணி கட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trudeau ,Toronto ,Justin Trudeau ,Canada ,party ,Dinakaran ,
× RELATED பிரதமர் மீது அதிருப்தி; கனடா துணைபிரதமர் திடீர் ராஜினாமா