×

2 நாள் அரசு முறை பயணம் இந்திய மனித வளத்தால் புதிய குவைத் உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு

குவைத் சிட்டி: இந்திய மனித வளத்தால், திறனால் புதிய குவைத் உருவாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்று 2 நாள் பயணமாக குவைத் சென்றார். 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி குவைத் சென்று வந்தார். அதன் பின்னர் கடந்த 43 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி குவைத் சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை குவைத்தின் முதல் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் பஹத் யூசுப் வரவேற்றார். குவைத் சென்ற பிரதமரிடம் மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை அரபு மொழியில் மொழி பெயர்த்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதுபற்றி மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியாவின் இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை அரபு மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்ட குவைத்தை சேர்ந்த அப்துல்லா அல் பரூன் மற்றும் அப்துல் லத்தீப் அல் நெசப் ஆகியோரின் முயற்சியை நான் பாராட்டுகின்றேன். அவர்களது முயற்சி உலகளவில் இந்திய கலாச்சாரத்தை பிரபலத்தினை எடுத்துக்காட்டுகின்றது’ என்றார். இதை தொடர்ந்து இரண்டு இதிகாசங்களின் அரபு பதிப்பில் பிரதமர் கையெழுத்திட்டார். மேலும் ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவு துறை அதிகாரியான 101 வயதான மங்கள் சைன் ஹண்டாவை பிரதமர் சந்தித்தார்.

அதன்பின்னர் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘புதிய குவைத்துக்கு தேவையான மனிதவளம், திறன்கள் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது. இந்தியாவில் இருந்து நீங்கள் இங்கு வருவதற்கு நான்கு மணிநேரம் ஆகும். ஆனால் ஒரு இந்தியப் பிரதமர் குவைத் செல்ல நான்கு தசாப்தங்கள் ஆனது. நீங்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, ​​ஒரு மினி இந்தியா இங்கு கூடியிருப்பது போல் உணர்கிறேன். ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குவைத்துக்கு வருகிறார்கள். குவைத் சமூகத்தில் இந்தியத் தொடர்பைச் சேர்த்துள்ளீர்கள். இந்தியாவின் திறமை, தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய கலாசாரத்துடன் கலந்துள்ள இந்திய திறன்களின் வண்ணங்களால் குவைத்தை நிரப்பியுள்ளீர்கள்’ என்று பேசினார்.

The post 2 நாள் அரசு முறை பயணம் இந்திய மனித வளத்தால் புதிய குவைத் உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : KUWAIT ,PM ,MODI ,INDIA ,King of ,Sheikh Meshal Al Ahmad Al Jafar Al Sabha ,Dinakaran ,
× RELATED இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்