புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் மீது 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சட்டசபை செயலரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் அமைச்சர், 4 பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் சபாநாயகர் கவர்னரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையில் பாஜவின் 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 பாஜ ஆதரவு சுயேட்சைகள் என 6 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இது பாஜ கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைமையிடம் புகார்கள் சென்றதை தொடர்ந்து, கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷ், மாநில தலைவர் செல்வகணபதி எம்பி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். தனி அணியாக செயல்படும் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேரு மற்றும் திருபுவனை தொகுதி பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் ஆகியோர் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கவர்னர் கைலாஷ்நாதனை புதுச்சேரி ராஜ்நிவாசில் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார், பாஜ எம்எல்ஏக்களான கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். தொடர்ந்து சபாநாயகர் செல்வம், கவர்னரை சந்தித்து பேசினார். பின்னர் பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் அளித்த பேட்டியில், லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரி முதல்வரை ஜனநாயக அடிப்படையில் விமர்சித்துள்ளார். விமான நிலைய விரிவாக்கத்தை செயல்படுத்த துணைநிலை ஆளுநரிடம் கோரியுள்ளோம்.
புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்ததாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அதன்படி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரசுக்கு தைரியம் உள்ளதா என்பதை விளக்க வேண்டும் என்றார். சபாநாயகர் செல்வம் கூறுகையில், ‘சுயேச்சை எம்எல்ஏக்கள் அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது சட்டசபை கூடும்போது விவாதிக்கப்படும். கட்சி விவகாரங்கள் குறித்தும், பாஜ சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயல்பாடு குறித்தும் பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் (அமைச்சர் நமச்சிவாயம்) கருத்துக்கூற வேண்டும்’ என்றார்.
The post புதுவை அரசியலில் குழப்பம் நீடிப்பு சபாநாயகர் மீது 2 எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மான மனு: கவர்னருடன் அமைச்சர் -4 பாஜ எம்எல்ஏ சந்திப்பு appeared first on Dinakaran.