சென்னை: அதிமுக சார்பில் கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவி வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பிப்ரவரியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது முதல் 10 மாதங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனை ஒன்றிய அமைச்சகமே வெளியிட்டுள்ளது. ஏன் 10 மாதம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுப்புகிறேன். அதற்கு பதில் தெரிவிக்காமல் என் மீது விமர்சனம் வைக்கிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது மக்களின் நலனுக்காக திறக்கப்படுகிறது. 30 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்துவிட முடியும். ஏரி திறக்கப்பட்டபோது 50 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
மழைநீரால் சென்னை பாதிக்கப்பட்டது. ஏரி திறக்கப்பட்டதால் சென்னை பாதிக்கப்படவில்லை. 1972ம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது. ஆனால், தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. நள்ளிரவில் திறக்கப்பட்டதால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவில்லை, தங்க ஏற்பாடு செய்யவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். நிகழ்ச்சியில் பெஞ்சமின், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பங்கேற்றனர்.
The post அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு appeared first on Dinakaran.