மும்பை: மகாராஷ்டிராவில் ‘ஹனிமூனுக்கு எங்கு செல்வது?’ என ஏற்பட்ட தகராறில் தன்னுடைய மருமகன் மீது அவரது மாமனார் ஆசிட் வீசியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த இபாத் அடிக் பால்கே என்பவர் குலாம் முர்தாசா கோட்டல் என்பவரின் மகளை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். புதிதாக திருமணமான பால்கே, தனது தேனிலவை கொண்டாட காஷ்மீர் செல்ல விரும்பினார். ஆனால், அவரது மாமனார், தனது மருமகனையும் மகளையும் வெளிநாட்டில் உள்ள புனித தலத்திற்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய மருமகன் பால்கேவை, காரில் காத்திருந்த மாமனார் கோட்டல் மடக்கினார். பின்னர் திடீரென மருமகன் பால்கே மீது ஆசிட் வீசியுள்ளார். அலறி துடித்த பால்கே செய்வதறியாது கத்தினார். அதற்குள் அங்கிருந்து மாமனார் தப்பியோடிவிட்டார். அப்பகுதியினர் பால்கேவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பால்கே உடனான தனது மகளின் திருமண உறவை முறிக்க மாமனார் கோட்டல் விரும்பினார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரை தேடி வருகிறோம். அவர் மீது ஆசிட் வீச்சு மூலம் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
The post ஹனிமூனுக்கு காஷ்மீர் செல்ல விரும்பியதால் மருமகன் மீது ஆசிட் வீசிய மாமனார் appeared first on Dinakaran.