×

மூளையின் முடிச்சுகள்

நன்றி குங்குமம் தோழி

வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி

பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், ‘அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்’ என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும். அதனால்தான் பாரதி ‘மோகத்தை கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு’ என்று பாட நேர்ந்ததோ! இன்றைக்கு எதை வளமான வாழ்வு என்று கூறுகிறார்கள் என்று பார்த்தோமானால், நமக்கான மனிதர்கள், நமக்கான திறமைகள், நமக்கான வாய்ப்புகள், நமக்கான ஊதியம், நமக்கான உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவை எல்லாம் இருந்தும், மனிதர்கள் ஏன் வெறுமையையும், இறுக்கத்தையும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதைப்பற்றி பேசியும், புலம்பிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் யுவால் நோவா ஹராரி அவர்கள் எழுதிய சேப்பியன்ஸ் புத்தகத்தில், நவீன சமூக மனிதர்கள் அனைவரின் மனநிலையும் கொண்டாட்டத்திற்கும், சந்தோஷத்திற்கும் மட்டுமே முதலிடம் கொடுக்கும். அவர்கள் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளால் வலியைத் தாங்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முன் வராத சமூகமாக மாறியிருப்பார்கள். இந்த வரிகளைப் படிக்கும் போது, நம் மக்களையும் பார்க்கும் போது, உண்மையைத்தான் கூறிவிட்டாரோ என்ற அச்சம் எழுகிறது.

தற்போதைய சமூகத்தில் பெரும்பாலும் கும்பல் மனப்பான்மை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதில் சோஷியல் மீடியா முதலிடம் என்றால், இரண்டாமிடம் ஆன்மிகம் மற்றும் கொள்கை, அரசியல் சார்ந்த குழுக்கள் என்றிருக்கின்றன. இங்கு அனைவருமே நான்தான் ராஜா என்கிற மனப்பான்மையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சோஷியல் மீடியாவில் அவர்களுக்கென்று இருக்கும் ஃபாலோவர்ஸ் மற்றும் அவர்களுக்கென்று இருக்கும் பிரபலத் தன்மையை வைத்து ஒரு பிம்பத்தை தனக்குத் தானே கட்டமைத்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் வெளிப்படுத்தும் விதமும், அவர்கள் வாழ்வியல் முறையும் வேறு மாதிரியாக இருக்கும் போது, நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். அல்லது நல்ல வேலை, நல்ல சம்பளம் அனைத்தும் இருந்தும், அவர்கள் மனதுக்குள் வைத்திருக்கும் பிம்பத்தைப் போல் நிஜ வாழ்வைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இதில் ஏற்படும் சாதகங்கள் அனைத்தையும் ரசித்து விட்டு, பாதகங்கள் வரும் போது, தனிமையை நோக்கி உடனே சென்று விடுவதாக இருக்கிறார்கள்.

இங்குதான் நம்முடைய அறிவை விட, மனம் ஜெயிக்க ஆரம்பிக்கத் தொடங்குகிறது.உதாரணத்திற்கு, அலுவலகத்தில் ஒருவர் மிகவும் திறமைசாலியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். எந்தவொரு திறமைசாலியாக இருந்தாலும் ஏதோவொரு இடத்தில் அவருக்கும் தொய்வு ஏற்படும். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கட்டும் அல்லது அவருக்கு பிடித்த மாதிரி விஷயங்கள் நடக்காமல் இருக்கும் போது, அவருடைய நடவடிக்கைகள் இயல்பாக மாறி விடும்.

அப்பொழுது அவர் ஆசைப்பட்டு, விருப்பப்பட்டு செய்த விஷயங்கள் கூட, தற்போது விருப்பமில்லாமல், ஏனோதானோவென்று செய்து கொண்டிருப்பார். அப்பொழுது அவருடைய நடவடிக்கைகளை வைத்து, அவரது நண்பரோ அல்லது கூட வேலை பார்ப்பவரோ தொடர்ந்து சப்போர்ட் செய்து கொண்டிருக்க முயற்சிப்பார்கள். அதையும் மீறி, சிலர் வெறுமையுடனே இருக்கப் பழகுவார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாக மாறி விடும். ஏனென்றால், அவர்கள் நம்பியது அவர் வேலை பார்த்த விதத்தை மட்டுமே தவிர, அவரின் மீதல்ல. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசமே இன்றைய மனிதர்களை வாழ்க்கையின் மீது வீழ்ச்சியடையச் செய்கிறது.

அதனால்தான், இன்றைக்கும் அலுவலகங்களில் அல்லது தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களில் திடீரென்று யாரோ ஒருவர் தற்கொலை செய்து விட்டார் என்று கூறுவதைப் பார்க்கிறோம். நாங்களும் பாதிக்கப்பட்ட நபரிடம் தொடர்ந்து பேசியும், உதவி செய்தும் மீட்டெடுக்க முயற்சி செய்தோம். நேற்று கூட நன்றாக பேசிக் கொண்டிருந்தார். ஏன் இப்படி தற்கொலை செய்தார் என தெரியவில்லை என்று நெருங்கிய நபர்களே கூறுவதை நாம் கேட்கிறோம்.

நம் முதலாளித்துவ மற்றும் தகவல் தொழில்நுட்ப சமூகத்தில் கொண்டாட்டமே வளமான வாழ்வு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கையை சமூகம் தரவில்லை என்றால், விரக்தி மனநிலைக்குச் சென்று விடுகிறார்கள்.மனித நடவடிக்கைகள் சார்ந்த பிரச்னைகள் என்றால், பிஹேவியரைத் தான் நாம் மாற்ற முயற்சிக்க வேண்டும். அன்றைய காலத்தில் ஒரே ஒரு விஷயத்தை திறம்பட செய்தால் போதும் என்ற நிலை இருந்தது.

இன்றைக்கு அப்படியல்ல. அனைத்து மக்களும் உறவுகளை சரியாகக் கையாளுவது, துறை சார்ந்து தொடர்ந்து கற்றுக் கொள்வது (படிப்பு மட்டுமல்ல) பதவி சார்ந்து முன்னேறுவது, இவை எல்லாம் தாண்டி உடல் ஆரோக்கியம் சார்ந்து உடற்பயிற்சி, சரியான தூக்கம், முறையான பொருளாதாரச் சேமிப்பு மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்து உணர்வுகளை வெளிப்படுத்துதல் என்றிருக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம். அதற்கு ஏற்ற மாதிரி நாம் பலதரப்பட்ட மனிதர்களுடன் முகம் தெரிந்தும், முகம் தெரியாமலும் பேசுகிறோம், பழகுகிறோம். இதனால் இவை அனைத்தையும் நாம் தொடர்ந்து தினமும் செய்து ஆக வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றோம்.

அதனால்தான், நாம் நமது நடவடிக்கையாலும், செயல்பாடுகளாலும் தடுமாறினாலும், அதை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த ஆரம்பிக்க வேண்டும். விரக்தியும், வெறுமையும் கூட மனித வாழ்வில் ஒரு அங்கம்தான். அதை உணர வேண்டுமே தவிர, ரசிக்கக் கூடாது.

மனிதர்களின் நிஜமும், பிம்பமும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். அந்த மாற்றங்களை நாம் அனுபவிக்கும் போது மட்டுமே, நமக்கு நம்மைப் பற்றிய புரிதல் வந்து கொண்டே இருக்கும். மனிதர்களின் வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி. அதை கற்றுக் கொள்ள நாம் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

மனநல ஆலோசகர்: காயத்ரி மஹதி

The post மூளையின் முடிச்சுகள் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Bharathi ,
× RELATED வீட்டுக்குள் மா கோலங்கள்!